பாஜகவின் ஆட்சிக் கலைப்பு முயற்சியை நான் கையாளுவேன்:  கர்நாடக முதல்வர் குமாரசாமி

பாஜகவின் ஆட்சிக் கலைப்பு முயற்சியை நான் வெற்றிகரமாகக் கையாளுவேன் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். 
பாஜகவின் ஆட்சிக் கலைப்பு முயற்சியை நான் கையாளுவேன்:  கர்நாடக முதல்வர் குமாரசாமி

பெங்களூரு: பாஜகவின் ஆட்சிக் கலைப்பு முயற்சியை நான் வெற்றிகரமாகக் கையாளுவேன் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். 

கர்நாடகத்தில் கூட்டணி அரசு நடத்தி வரும் மஜதவும், காங்கிரஸும் பல்வேறு பிரச்னைகளில் அவ்வப்போது ஒருவர்மீது ஒருவர் விமர்சனங்களை முன்வைக்கும் போக்கு அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.

அமைச்சரவையில் காலியாக இருந்த இடங்களை காங்கிரஸ் அண்மையில் நிரப்பியது. மேலும், புதிய அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்குவதற்காக ஏற்கெனவே அமைச்சர்களாக உள்ள காங்கிரஸாரின் துறைகளையும் அக்கட்சி மாற்றியமைத்தது.

கூட்டணி அரசில் காங்கிரஸ் சார்பில் துணை முதல்வராக இருக்கும் ஜி.பரமேஸ்வர், காவல், பெங்களூரு வளர்ச்சி ஆகிய இரு துறைகளையும் கவனித்து வந்தார். இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற துறை மாற்றத்தின் போது, அவரிடம் இருந்த காவல் துறை பறிக்கப்பட்டு, புதிதாக அமைச்சரான எம்.பி.பாட்டீலிடம் அளிக்கப்பட்டுள்ளது. இதை காங்கிரஸில் இருக்கும் முன்னணித் தலைவர்களும் எதிர்பார்க்கவில்லை.

முன்னாள் முதல்வர் சித்தராமையா, தனது ஆதரவாளர் எம்.பி.பாட்டீலுக்கு வழங்குவதற்காக ஜி.பரமேஸ்வரிடம் இருந்து அதிகாரம் குவிந்த காவல் துறையை பறித்துவிட்டார் என்று கூறப்பட்டது. இது காங்கிரஸில் புகைச்சலை ஏற்படுத்திய நிலையில், இதே பிரச்னை மஜதவிலும் எதிர்வினைக்கு காரணமாக அமைந்தது.

முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெளடாவின் மூத்த மகனும், முதல்வர் எச்.டி.குமாரசாமியின் அண்ணனுமான எச்.டி.ரேவண்ணா, பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்து வருகிறார். இவர், காங்கிரஸ் அமைச்சர்களின் துறைகளில் தலையிட்டு வருவதாகவும், அதிகாரிகளின்  பணியிட மாற்றங்கள் குறித்து பரிந்துரைகளை வழங்கி வருவதாகவும் புகார் கூறப்பட்டு வந்தது. 

மேலும், மஜதவைச் சேர்ந்த முதல்வர் குமாரசாமியின் அரசியல் செயலராக காங்கிரஸ்காரரை அக்கட்சி நியமித்துள்ளது. முதல்வர் குமாரசாமி, தன்னால் முடிந்த வரை காங்கிரஸ் தலைவர்களின் செயல்களை சகித்துக் கொள்வார். ஆனால், ஒருநாள் என்ன நடக்கும் என்பது தெரியாது என ரேவண்ணா தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், 104 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, அதிருப்தியில் உள்ள காங்கிரஸ், மஜத எம்.எம்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுத்து மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கான தீவிர வேலைகளில் பாஜகவினர் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 

அமைச்சரவை மாற்றத்தில் பதவியை இழந்த ரமேஷ் ஜார்கிகோளி, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுயேட்சை எம்.எல்.ஏ ஒருவர் என 12 எம்.எல்.ஏ.க்கள் நாளை மறுநாள் தங்களது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பாஜகவில் இணைய உள்ளதாக வெளியான தகவல் கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் முதல்வர் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ள என்பதே அரசியல் நோக்கர்கள் கருத்தாக உள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்க இன்னும் 9 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மட்டுமே தேவை என்பது குறிப்பிடத்தக்கது.  

 இந்நிலையில் பாஜகவின் ஆட்சிக் கலைப்பு முயற்சியை நான் வெற்றிகரமாகக் கையாளுவேன் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். 

முன்னதாக கர்நாடக துணை முதல்வர் ஜி.பரமேஸ்வரா, முன்னாள் முதல்வர் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் மற்றும் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார் 

சந்திப்புக்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த  பரமேஸ்வரா கூறும்போது,

கர்நாடக அரசு கவிழும் என பாஜகவினர் தொடர்ந்து கூறிக்கொண்டேயிருந்தாலும், அது ஒருபோதும் நடக்காது. குறிப்பிட்ட சில எம்எல்ஏ.க்கள் விடுமுறையை கழிப்பதற்கு அல்லது கோவிலுக்கு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருக்கலாம். அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏ.க்களும் எங்கள் பக்கம் உறுதியாக இருகின்றனர். பட்ஜெட்  குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் சார்பில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களை சந்தித்தேன் 

இவ்வாறு அவர் தெரிவித்தார். அதேசமயம் தற்போதைய சூழல் குறித்து மாநில முதல்வர்   குமாரசாமி கூறியதாவது:

ஊடகங்கள் குறிப்பிடும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் முவரும் என்னோடு தொடர்பில் உள்ளனர். அவர்கள் மும்பைச் செல்வதற்கு முன் என்னிடம் கூறி விட்டுதான் சென்றார்கள். அரசுக்கு எந்தவித மிரட்டலும் இல்லை. பாரதீய ஜனதா இதுதொடர்பாக என்ன செய்து வருகிறது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இதை நான் நான் வெற்றிகரமாகக் கையாளுவேன். எதற்கு ஊடகங்கள் இது தொடர்பாக கவலைப்பட வேண்டும்?

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com