காங்கிரஸால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும்: சச்சின் பைலட்

வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் மட்டுமே பாஜகவின் சவால்களை எதிர்கொண்டு, அதனை வீழ்த்த முடியும் என்று ராஜஸ்தான் மாநில துணை முதல்வர்
காங்கிரஸால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும்: சச்சின் பைலட்


வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் மட்டுமே பாஜகவின் சவால்களை எதிர்கொண்டு, அதனை வீழ்த்த முடியும் என்று ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைந்து தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் வியூகம் வகுத்து வருகிறது. இந்நிலையில், நாட்டின் அதிக தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கட்சிகள் தனிக்கூட்டணி அமைத்ததால், அங்கு தனித்துப் போட்டியிட வேண்டிய நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், சச்சின் பைலட் இவ்வாறு கூறியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இது தொடர்பாக மேலும் கூறியதாவது:
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அவர்கள் வலுவாக இருப்பதாகக் கூறப்படும் மாநிலங்களிலேயே தோல்விகளைத் தழுவியுள்ளது. பாஜக கூட்டணியில் இருந்த பல கட்சிகள் விலகி வருகின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீதும், ராகுலின் தலைமைப் பண்பின் மீதும் பலரும் நம்பிக்கை வைத்துள்ளனர்.
நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்புகளை சீர்குலைத்து வரும் பாஜக அரசை வீழ்த்த காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும். ஏனெனில், பாஜகவின் சவால்களை தேசிய அளவில் எதிர்கொள்ள வலுவான கட்சி காங்கிரஸ் மட்டுமே. உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வலுவாகவே உள்ளது. அங்கு தனித்துப் போட்டியிடுவதன் மூலம் கட்சியின் வலிமை முழுமையாக வெளிப்படும்.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் பாஜகவை காங்கிரஸ் தோற்கடித்து ஆட்சியைப் பிடித்துள்ளதை மறந்துவிடக் கூடாது. இது கட்சித் தொண்டர்களுக்கு தேசிய அளவில் உத்வேகம் அளித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி.
ராஜஸ்தானில் மக்களவைத் தேர்தலைச் சந்திக்க முழுவீச்சில் தயாராகி வருகிறோம். வெற்றிவாய்ப்புள்ளவர்களுக்கும், இளைஞர்களுக்கும் வாய்ப்பளிக்கப்படும். இதற்கான ஆலோசனைக் கூட்டங்கள் ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஒற்றுமையாக உழைத்தால் வெற்றி உறுதி என்பதை சட்டப் பேரவைத் தேர்தல் மூலம் உணர்ந்துள்ளோம். இப்போது ராஜஸ்தானில் கூடுதல் உற்சாகத்துடன் காங்கிரஸ் தொண்டர்கள் மக்களவைத் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கியுள்ளனர் என்றார் சச்சின் பைலட்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com