இந்தியத் தூதர், துணைத் தூதரை பின்தொடர்ந்த பாகிஸ்தான் அதிகாரி: புதிய சர்ச்சை

பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர், துணைத் தூதர் ஆகியோரை பாகிஸ்தான் காவல்துறை அதிகாரி ஒருவர் இடைவிடாமல் பின்தொடர்ந்து சென்றது இருநாடுகளின்


பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர், துணைத் தூதர் ஆகியோரை பாகிஸ்தான் காவல்துறை அதிகாரி ஒருவர் இடைவிடாமல் பின்தொடர்ந்து சென்றது இருநாடுகளின் உறவில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் அரசிடம் இந்தியத் தூதரகம் புகார் அளித்துள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம், இந்தியத் தூதரகம் அளித்துள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் தேதி நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இந்தியத் தூதரும், துணைத் தூதரும் கலந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இருவரையும், பாகிஸ்தான் காவல்துறை அதிகாரி ஒருவர் இடைவிடாமல் பின்தொடர்ந்தார். மேலும் இருவரையும் அவர் தீவிரமாகவும் கண்காணித்தார்.
இதுமட்டுமன்றி, இந்தியத் தூதரகத்தில் பணிபுரிந்து வரும் 2ஆம் நிலை செயலரின் முகநூல் கணக்குகளில் சந்தேகத்துக்குரிய நபர்கள் பலமுறை ஊடுருவ முயற்சித்தனர். ஒருமுறை, செயலரின் உறவினரது முகநூல் கணக்கு போல போலியான கணக்கை உருவாக்கி, ஊடுருவல் முயற்சி நடைபெற்றது. இதுகுறித்து அவருக்கு முகநூல் நிறுவனத்திடம் இருந்து பலமுறை எச்சரிக்கை குறிப்புகள் வந்துள்ளன.
இந்தச் சம்பவங்களை பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தனது கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த விவகாரம் குறித்து உயர்மட்ட அளவில் விசாரணை நடத்தப்படும் என்று பாகிஸ்தான் தரப்பில் உறுதியளிக்கப்பட வேண்டும் என்று அதில் இந்தியத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
பாகிஸ்தானும் புகார்: இதனிடையே, தில்லியில் உள்ள இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றி வரும் அதிகாரி ஒருவர், சரோஜினி நகரிலுள்ள சந்தைக்கு சென்றபோது, அங்கு வந்த பெண் ஒருவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அந்தப் பெண், அருகிலுள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தூதரக அதிகாரியை அழைத்து சென்று தில்லி போலீஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது தனது செயலுக்காக பாகிஸ்தான் தூதரக அதிகாரி, எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, அந்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.
இருப்பினும், தில்லி காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று தூதரக அதிகாரியை விசாரணை என்ற பெயரில் பலமணி நேரம் பிடித்து வைத்திருந்ததாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரகம் புகார் அளித்துள்ளது. அந்தப் புகாரில் பாகிஸ்தான் தூதரக அதிகாரியாக பணியாற்றுவதாக தெரிவித்த பிறகும், அவரை தில்லி காவல் துறையினர் பலமணி நேரம் விசாரணை என்ற பெயரில் பிடித்து வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
உரி பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. இந்த சூழ்நிலையில், இரு நாடுகளும் ஒன்றின் மீது ஒன்று அதிகாரிகள் தொடர்பாக புகார் தெரிவித்துள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com