தேச விரோத வழக்கு: தேர்தலுக்கு முந்தைய அரசியல் என கன்னையா குமார் விமர்சனம்

தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கன்னையா குமார் உள்ளிட்டோர் மீது தொடுக்கப்பட்டுள்ள
தேச விரோத வழக்கு: தேர்தலுக்கு முந்தைய அரசியல் என கன்னையா குமார் விமர்சனம்


தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கன்னையா குமார் உள்ளிட்டோர் மீது தொடுக்கப்பட்டுள்ள தேச விரோத வழக்கில், தில்லி காவல் துறை திங்கள்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில்,  இது தேர்தலுக்கு முந்தைய அரசியல் என கன்னையா குமார் விமர்சனம் செய்துள்ளார். 

தில்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ஆம் தேதி, நாடாளுமன்றத் தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியதாக, தூக்கிலிடப்பட்ட அஃப்சல் குருவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்வில், உமர் காலித், அனிர்பான் பட்டாச்சார்யா உள்ளிட்டோர் தேச விரோத கோஷங்கள் எழுப்பியதாகக் கூறப்படுகிறது. நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த கன்னையா குமார், அவர்களை தேசத்துக்கு எதிராக கோஷமிடுமாறு தூண்டியதாகக் காவல் துறை குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக, அகில பாரதிய வித்யார்தி பரிஷத் அமைப்பினரும், பாஜக எம்.பி. மகேஷ் கிரியும் வசந்த்குஞ்ச் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில், கன்னையா குமார் உள்ளிட்டோர் மீது தேச விரோதச் செயலில் ஈடுபட்டது(124ஏ), குற்றச்சதியில் ஈடுபட்டது(120பி), சட்டவிரோதமாக கூடியது(149), வன்முறையில் ஈடுபட்டது(147) என இந்திய தண்டனையியல் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக, விசாரணை நடத்தி வந்த தில்லி காவல் துறை, தில்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி சுமித் ஆனந்த் முன்னிலையில் நேற்று திங்கள்கிழமை 1200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

அந்தக் குற்றப்பத்திரிகையில், கன்னையா குமார், உமர் காலித், அனிர்பான் பட்டாச்சார்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜாவின் மகள் அபராஜிதா, மாணவர் சங்க முன்னாள் துணைத் தலைவர் ஷேஹ்லா ரஷீத், அசுதோஷ் குமார் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. 

இதுகுறித்து கன்னையா குமார் கூறுகையில், விரைவில் மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், 3 ஆண்டுகளுக்குப்பின் எனக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக போலீஸாருக்கும் பிரதமர் மோடிக்கும் நன்றி. இதில் அரசியல் நோக்கம் இருப்பதாகவும், நீதித்துறையின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என்றவர் இது தேர்தலுக்கு முந்தைய அரசியல் என விமர்சனம் செய்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com