நம்முடைய உயர்ந்த பாரம்பரியத்தை பாதுகாக்கத் தவறி விட்டனர்: காங்கிரஸ் மீது மோடி குற்றச்சாட்டு 

நம்முடைய உயர்ந்த பாரம்பரியத்தை பாதுகாக்க முந்தைய ஆட்சியாளர்கள் தவறி விட்டனர் என்று காங்கிரஸ் மீது பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். 
நம்முடைய உயர்ந்த பாரம்பரியத்தை பாதுகாக்கத் தவறி விட்டனர்: காங்கிரஸ் மீது மோடி குற்றச்சாட்டு 

பாலங்கிர் (ஒடிஷா): நம்முடைய உயர்ந்த பாரம்பரியத்தை பாதுகாக்க முந்தைய ஆட்சியாளர்கள் தவறி விட்டனர் என்று காங்கிரஸ் மீது பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். 

ஒடிஷா மாநிலத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அங்கு ரூ. 1550 கோடி மதிப்பில் பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன்பின் பாலங்கிர் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

கடந்த காலத்தில் நமது நாட்டை ஆட்சி செய்தவர்கள் சுல்தான்போல் ஆட்சி செய்துள்ளனர். அவர்கள் நம்முடைய உயர்ந்த பாரம்பரியம், புனிதமான நாகரிகம் ஆகியவற்றைப் புறந்தள்ளி, பாதுகாக்கத் தவறிவிட்டனர். 

ஆனால் எங்கள் அரசு நாட்டின் பாரம்பரியத்தை காக்கக் கடமைப்பட்டுள்ளது. நாட்டில் பல்வேறு கோயில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகளை மீட்க மத்திய அரசு முயன்று பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஒற்றுமையின் சின்னமாக சர்தார் படேல் சிலை அமைத்ததையும் எதிர்க்கட்சிகள்  எதிர்க்கிறார்கள். உலகின் உயரமான சிலையான இதை அமைப்பதன் மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகின என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். 

நாங்கள் ஆட்சிக்கு வந்தபின் ஏறத்தாழ 6 கோடி போலி ரேஷன் கார்டுகள், முறைகேடான கேஸ் இணைப்புகள், போலிப் பெயரில் உதவித்தொகை பெறுதல், ஓய்வூதியம் பெறுதல் போன்ற செயல்களை ஒழித்திருக்கிறோம். 

குறிப்பாக ஏழை மக்களிடம் இருந்து இடைத்தரகர்கள் பணத்தைக் கொள்ளையடித்ததை நாங்கள் தடுத்து நிறுத்திவிட்டோம்..

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு முதல்முறையாக, பாஜக அரசு எடுத்த புதிய முயற்சியால், தற்போது அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர் சாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்திருக்கிறோம். 

இவ்வாறு அவர் பேசினார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com