பேராயருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கன்னியாஸ்திரிகள் வெளியேற உத்தரவு! 

கன்னியாஸ்திரி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய குற்றம்சாட்டுக்குள்ளான பேராயர் ஃபிரான்கோ முலக்கல் எதிராக போராடிய
பேராயருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கன்னியாஸ்திரிகள் வெளியேற உத்தரவு! 


கன்னியாஸ்திரி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய குற்றம்சாட்டுக்குள்ளான பேராயர் ஃபிரான்கோ முலக்கல் எதிராக போராடிய கன்னியாஸ்திரிகள் கோட்டயம் கான்வென்ட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. 

தில்லியில் உள்ள ஜலந்தர் ரோமன் கத்தோலிக்க திருச்சபை மாவட்டத்தின் பேராயராக இருப்பவர் ஃபிரான்கோ முலக்கல். அவர் மீது கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு பாலியல் புகாரை முன்வைத்தார். கடந்த 2014-இல் இருந்து 2016 வரையில் ஃபிரான்கோ பல்வேறு தருணங்களில் தம்மை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக அவர் போலீஸாரிடம் புகாரளித்திருந்தார். அதை கேரள காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், அந்த வழக்கு விசாரணை வேண்டுமென்றே தாமதப்படுத்தப்படுவதாகவும், பேராயரைக் காப்பாற்ற போலீஸார் முயலுவதாகவும் சர்ச்சைகள் எழுந்தன. இதனிடையே, கேரள மாநிலம் கோட்டயத்தில் கன்னியாஸ்திரிகள் 5 பேர் இந்த விவகாரத்தை முன்னிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸாருக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி அவர்கள் முழக்கமிட்டனர். 

 இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியை போலீஸார் பல முறை விசாரித்தனர். ஆனால், குற்றம்சாட்டப்பட்ட பேராயரிடம் ஒரே ஒரு முறை மட்டுமே விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக பல ஆதாரங்கள் இருந்தும் பேராயர் ஃபிரான்கோ மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 இந்த வழக்கை குற்றப் பிரிவு விசாரணைக்கு மாற்றப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு மாற்றப்பட்டால் பேராயருக்கு சாதகமாக வழக்கை போலீஸார் திசை திருப்பிவிடுவார்கள். அதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கமாட்டோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

 இந்தக் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்த கேரள போலீஸார், வழக்கை குற்றப் பிரிவுக்கு மாற்ற முயற்சிக்கவில்லை என்றனர்.

தற்போது, இந்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்துள்ள பேராயர் பிராங்கோ முலக்கல் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும், விசாரணைக்கு ஆஜராகும் போது தவிர, பிற நேரங்களில் கேரளாவுக்குள் நுழையக்கூடாது என்ற நிபந்தனையில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், பிராங்கோவுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகள், கோட்டயம் கான்வென்ட்டை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து வெளியான தகவலின்படி, இயேசு மிஷனரிகள் திருச்சபையின் தலைவர் ரெஜினா கடம்தொட்டு, கன்னியாஸ்திரிகளுக்குத் தனித்தனியாக இட மாற்ற உத்தரவுகளை அளித்துள்ளார்.

அதில், கன்னியாஸ்திரி அனுபமா கேலமங்கலது பஞ்சாபில் உள்ள சாமியாரி சமூகத்திலும், கன்னியாஸ்திரி அங்கிதா உரும்பில் கன்னூரில் உள்ள பரியாரம் பகுதியிலும், கன்னியாஸ்திரி ஆல்பி பல்லச்சேரில் பிகாரில் உள்ள பகர்தலா பகுதியில் பணியாற்ற வேண்டும் என உத்தரவிட்டப்பட்டுள்ளது. கன்னியாஸ்திரி ஜோசபைன் வில்லூன்னிக்கல் ஜார்கண்டில் லால்மாட்டியா தலைவராகவும் நியமிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.  

போராட்டத்தில் ஈடுபட்ட கன்னியாஸ்திரி நினா ரோஸ் மட்டும் எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com