கர்நாடகத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் பா.ஜ.க. தோல்வி

கர்நாடகத்தில் மஜத- காங்கிரஸ் கூட்டணி அரசைக் கவிழ்க்க பாஜக மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
கர்நாடகத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் பா.ஜ.க. தோல்வி


கர்நாடகத்தில் மஜத- காங்கிரஸ் கூட்டணி அரசைக் கவிழ்க்க பாஜக மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
இதுகுறித்து ஹுப்பள்ளியில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
ஒரு கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.வை மாற்றுக் கட்சிக்கு இழுக்கும் நடைமுறை ஜனநாயகத்துக்கு பெரும் பாதகமாகக் கூடியதாகும். தமது கட்சி எம்.எல்.ஏ.க்களின் மீது பாஜகவுக்கு நம்பிக்கையில்லை. அதனால்தான் பாஜக தனது எம்.எல்.ஏ.க்களை நட்சத்திர விடுதியில் தங்க வைத்திருந்தது. கர்நாடக அரசியலில் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சிக்கு இழுக்கும் முறையை அறிமுகம் செய்ததே பாஜகதான். 
மாற்றுக் கட்சி எம்.எல்.ஏ.க்களை பாஜகவுக்கு இழுக்கும் முறை கர்நாடக அரசியலைக் கேலிக் கூத்தாக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் யாரும் பாஜகவுக்கு செல்ல மாட்டார்கள்.
பாஜக தலைவர்களுக்கு ஜனநாயகக் கட்டமைப்பில் சிறிதும் நம்பிக்கையில்லை. அதுமட்டுமல்ல, எதிர்க்கட்சியில் அமர்ந்து பணியாற்றுவதிலும் பாஜகவுக்கு அக்கறை, ஆர்வம் இல்லாததால், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற குதிரைபேரத்தில் ஈடுபட்டுள்ளது. ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் தோற்றதால், பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 
அரசியலமைப்புச் சட்டப்படியான அரசியல் கட்டமைப்பில் நம்பிக்கை இல்லாததால், மாற்றுக் கட்சியினரை இழுப்பது போன்ற விபரீத விளையாட்டுகளில் பாஜக ஈடுபட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் யாருமில்லை. ஒருவேளை பிரச்னைகள் இருந்தால், அவற்றை சரிசெய்து கொள்வோம்.
தற்போதைக்கு அமைச்சரவையில் எவ்வித மாற்றமும் இல்லை. புதிதாக யாருக்கும் அமைச்சர் பதவி வழங்கப் போவதாக வாக்குறுதி எதுவும் அளிக்கவில்லை. பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடக்கவிருக்கும் காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு கூட்டத்தில் கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொள்வார்கள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com