சபரிமலை விவகாரம்: 2 பெண்களின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று சந்நிதானத்தில் வழிபாடு செய்த கேரளத்தைச் சேர்ந்த 2 பெண்கள், தங்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடக்
சபரிமலை விவகாரம்: 2 பெண்களின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை


சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று சந்நிதானத்தில் வழிபாடு செய்த கேரளத்தைச் சேர்ந்த 2 பெண்கள், தங்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எல்.என்.ராவ், எஸ்.கே.கௌல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மூத்த வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங், வியாழக்கிழமை தாக்கல் செய்தார்.
மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
அனைத்து வயதுப் பெண்களையும் சபரிமலை கோயிலில் தரிசனம் செய்ய அனுமதிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். எங்களின் உயிருக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளதால், வாரத்தில் ஏழு நாள்களும் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும். எங்களுக்கு எதிராக தவறான சொற்களைப் பயன்படுத்துபவர்கள், சமூக வலைதளங்களில் எங்களை விமர்சிப்பவர்கள் ஆகியோருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். 10 வயதுக்கு மேல் 50 வயதுக்குள்பட்ட பெண்கள் சபரிமலை சந்நிதானத்தில் வழிபாடு செய்த பிறகு கோயில் நடையை அடைத்துவிட்டு, பரிகாரச் சடங்குகளை மேற்கொள்ளாமல் இருக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
குறிப்பிட்ட வயதுப் பெண்கள் வழிபாடு செய்துவிட்டுச் சென்ற பிறகு, பரிகாரச் சடங்குகளை செய்வதன் மூலம், அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்று அந்த மனுவில் இரண்டு பெண்களும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது. சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சுவாமி தரிசனம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி தீர்ப்பளித்தது.
அதைத் தொடர்ந்து, கேரளத்தைச் சேர்ந்த 50 வயதுக்குள்பட்ட 2 பெண்கள் போலீஸார் பாதுகாப்புடன் சபரிமலைக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து, கேரளம் முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வன்முறை ஏற்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com