தபோல்கர், பன்சாரே வழக்கு விசாரணையை தாமதிக்க வேண்டாம்: சிபிஐக்கு மும்பை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

கௌரி லங்கேஷ் வழக்குக்காக, தபோல்கர், பன்சாரே கொலை வழக்குகள் மீதானவிசாரணையை தாமதப்படுத்த வேண்டாம்; அந்த வழக்குகளை தனியாக விசாரிக்கலாம் என்று


கௌரி லங்கேஷ் வழக்குக்காக, தபோல்கர், பன்சாரே கொலை வழக்குகள் மீதானவிசாரணையை தாமதப்படுத்த வேண்டாம்; அந்த வழக்குகளை தனியாக விசாரிக்கலாம் என்று சிபிஐ, மகாராஷ்டிர மாநில சிஐடி போலீஸார் ஆகியோருக்கு மும்பை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு, மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.சி. தர்மாதிகாரி, எம்.எஸ். கார்ணிக் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மேற்கண்ட 3 வழக்குகள் மீதான விசாரணை நிலவர அறிக்கையை மகாராஷ்டிர மாநில சிஐடி போலீஸாரைக் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு தாக்கல் செய்தது. அதில், கர்நாடகத்தில் கௌரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டோரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும், இது பன்சாரே கொலை வழக்கில் தலைமறைவாக இருப்போரை தேடி கண்டுபிடிக்க உதவியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை பார்வையிட்ட நீதிபதிகள், ஏற்கெனவே இதே கருத்தை சிபிஐ அமைப்பும், சிஐடி போலீஸாரும் முன்வைத்திருந்ததை சுட்டிக்காட்டினர். அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
தபோல்கர், பன்சாரே வழக்குகளை சிபிஐயும், சிஐடி போலீஸாரும் தனியாக விசாரணை நடத்தலாம். கர்நாடகத்தில் கௌரி லங்கேஷ் கொலை செய்யப்படுவதற்கு முன்பே, மகாராஷ்டிரத்தில் பன்சாரே, தபோல்கர் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆதலால் இந்த வழக்குகள் தொடர்பான ஆதாரங்களை சேகரிக்க வேண்டும் என்றனர்.
இதைத் தொடர்ந்து, சிபிஐக்கும், சிஐடி போலீஸாருக்கும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முற்போக்கு சிந்தனையாளரும், எழுத்தாளருமான தபோல்கர், புணேயில் கடந்த 2013ஆம் ஆண்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதேபோல், கோலாப்பூரில் பன்சாரே கடந்த 2015ஆம் ஆண்டிலும், பெங்களூரில் 2017ஆம் ஆண்டில் கௌரி லங்கேஷும் சுட்டுக் கொல்லப்பட்டனர். 
கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சரத் கலாஸ்கர் என்பவர், தபோல்கர் மற்றும் பன்சாரே கொலை சம்பவங்களிலும் தங்களுக்கு தொடர்பிருப்பதாக தெரிவித்திருந்தார். 
இதனால் 3 கொலைகளையும் ஒரே குழு அல்லது அமைப்பைச் சேர்ந்தவர்கள் செய்திருக்கலாம் என்ற கண்ணோட்டத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com