மகாராஷ்டிரம்: நடன விடுதிகளை மீண்டும் திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி

மகாராஷ்டிர மாநிலத்தில் நடன விடுதிகளை மீண்டும் திறக்க அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. எனினும், அவற்றுக்கு சில


மகாராஷ்டிர மாநிலத்தில் நடன விடுதிகளை மீண்டும் திறக்க அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. எனினும், அவற்றுக்கு சில கட்டுப்பாடுகளையும் நீதிமன்றம் விதித்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் நடன விடுதிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் கடந்த 2016-ஆம் ஆண்டு மாநில அரசு கொண்டுவந்த சட்ட விதிகளை நீதிபதி ஏ.கே. சிக்ரி தலைமையிலான அமர்வு ரத்து செய்துள்ளது. 
இதையடுத்து, அந்த மாநிலத்தில் ஏற்கெனவே உள்ள நடன விடுதிகள் மீண்டும் செயல்படவும், புதிதாக நடன விடுதிகள் தொடங்கவும் அனுமதி கிடைத்துள்ளது.
மத வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் இருக்கும் இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் நடன விடுதிகள் அமைய வேண்டும்; விடுதிகளில் நடனமாடுவோரை ஊக்கப்படுத்த டிப்ஸ் வழங்கலாம். ஆனால், பணத்தை அவர்கள் மீது வீசக் கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகளுடன் நடன விடுதிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நடன விடுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும்; மது அருந்தும் அறைக்கும், நடனம் நடைபெறும் அறைக்கும் இடையே தடுப்பு இருக்க வேண்டும் என்ற மாநில அரசின் விதிகளை ரத்து செய்துள்ள உச்சநீதிமன்றம், நடன விடுதிகள் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்ற விதியை உறுதி செய்தது.
நீதிபதிகள் தீர்ப்பை அறிவிக்கும்போது, மகாராஷ்டிரத்தில் கடந்த 2005 முதல் நடன விடுதிகள் தொடங்க எவருக்கும் உரிமம் வழங்கப்படவில்லை. இந்த நிலை இவ்வாறு நீடிக்கக் கூடாது. நடன விடுதி விவகாரத்தில் ஒட்டுமொத்தமாகத் தடை விதிக்கப்படாமல், அவற்றுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று கூறியது.
நடன விடுதிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக மகாராஷ்டிர அரசு 2016-ஆம் ஆண்டு கொண்டுவந்த சட்ட விதிகளுக்கு எதிராக, உணவக மற்றும் நடன விடுதிகளின் உரிமையாளர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீது விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது. இந்நிலையில் தனது தீர்ப்பை வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
தீர்ப்பை மதிப்போம்: நடன விடுதிகள் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிப்போம் என்று மகாராஷ்டிர அரசு கூறியுள்ளது.
இதுகுறித்து மாநில உள்துறை அமைச்சர் ரஞ்சித் பாட்டீல் கூறுகையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பு நகல் கிடைத்த பிறகு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வோம். தீர்ப்பை மதித்து செயல்பட்டாலும், நடன விடுதிகளில் அசம்பாவிதங்கள் நிகழாத வகையில் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
மீண்டும் மூடுவோம்: மகாராஷ்டிர அரசு-நடன விடுதிகளின் உரிமையாளர்கள் இடையே ரகசிய உடன்பாடு ஏற்பட்டதன் மூலமாகவே, தற்போது நடன விடுதிகளுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் அனுமதி அளித்துள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கூறியுள்ளது. அத்துடன், தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நடன விடுதிகளை மீண்டும் மூடுவது உறுதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
அரசுக்கு தோல்வி: நடன விடுதிகளுக்கு அனுமதி அளித்த உச்சநீதிமன்ற தீர்ப்பால் மகாராஷ்டிர அரசு தோல்வியடைந்துள்ளதாக விமர்சித்துள்ள சிவசேனை, நடன விடுதிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் சட்டத்தை தவறில்லா ஒன்றாக அரசு உருவாக்கவில்லை என்று கூறியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com