மேகாலய சுரங்க விபத்தில் சிக்கியவர்களில் ஒருவர் உடல் கண்டெடுப்பு

மேகாலயத்தில் ஆற்று வெள்ளம் புகுந்த சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 15 சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் பணியில் முன்னேற்றமாக, சிக்கியவர்களில் ஒருவரின்


மேகாலயத்தில் ஆற்று வெள்ளம் புகுந்த சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 15 சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் பணியில் முன்னேற்றமாக, சிக்கியவர்களில் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சுரங்கத்தினுள் சடலங்களையும், எலும்புக்கூடுகளையும் கேமரா வழியாக மீட்பு படையினர் கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேகாலயத்தின் கிழக்கு ஜைந்தியா மாவட்டம், லும்தாரி கிராமப் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த நிலக்கரிச் சுரங்கத்தில் கடந்த மாதம் 13-ஆம் தேதி ஆற்று வெள்ளம் புகுந்தது. இதில், 15 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்பதற்காக, இந்திய கடற்படை, தேசிய பேரிடர் மேலாண்மை படை ஆகியவற்றின் நீச்சல் வீரர்கள் கடந்த பல வாரங்களாக கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நீருக்குள் செலுத்தக்கூடிய சிறிய ஹெலிகாப்டர் மூலம் சடலங்களைக் கண்டுள்ளதாகவும், சிக்கியவர்களில் ஒருவரது உடல் மீட்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். . 
இதுதொடர்பாக மீட்பு பணி நடவடிக்கை செய்தித்தொடர்பாளர் கூறுகையில்,  சுரங்கத்தினுள் 200 அடி தொலைவில் சுரங்கத்தொழிலாளர் ஒருவரது உடலை நீச்சல் வீரர் கண்டுள்ளார். அவரது உடல் பாதி தூரத்துக்கும் மேல் கொண்டு வரப்பட்டது. எனினும் சுரங்கத்தை விட்டு உடலை வெளியே கொண்டு வரும் வழியில், உடல் சிதைந்துபோக நேரிடும் என்பதால், உடலை வெளியே கொண்டு வருவதில் சிக்கல் நிலவி வருகிறது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி அந்த உடலை வெளியில் கொண்டு வருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார். 
இதனிடையே, எலும்பு கூடுகளைக் கண்டது குறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் கடற்படை செய்தித்தொடர்பாளர் டி.கே. சர்மா வியாழக்கிழமை கூறியதாவது:
நிலக்கரி சுரங்கத்தின் 160-210 அடி வரை கேமரா பொருத்திய சிறிய ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டது. சுரங்கத்தினுள் சடலங்களும், எலும்புகூடுகளும் இருப்பது கேமரா மூலம் தெரிய வந்தது. எனினும், அது சுரங்கத்தினுள் சிக்கிய தொழிலாளர்களின் உடல்தானா என்பது தெரியவில்லை. தடயவியல் அதிகாரிகளின் பரிசோதனைக்கு பின்பே அது உறுதி செய்யப்படும். மருத்துவர்களின் ஆலோசனைப்படி சடலங்களை வெளியில் கொண்டு வருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com