லோக்பால் உறுப்பினர்கள் பெயர்களை பரிந்துரைக்க உச்சநீதிமன்றம் கெடு

லோக்பால் அமைப்பில் உறுப்பினர்கள் தொடர்பான பரிந்துரைகளை அடுத்த விசாரணைக்குள் தேர்வு செய்யும் குழு
லோக்பால் உறுப்பினர்கள் பெயர்களை பரிந்துரைக்க உச்சநீதிமன்றம் கெடு


லோக்பால் அமைப்பில் உறுப்பினர்கள் தொடர்பான பரிந்துரைகளை அடுத்த விசாரணைக்குள் தேர்வு செய்யும் குழு பரிந்துரைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லோக்பால் உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவின் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவே பிற உறுப்பினர்களாக யாரை நியமிக்கலாம் என்பதை பரிந்துரைக்க வேண்டும்.
முன்னதாக, லோக்பால் உறுப்பினர்களை பரிந்துரை செய்வதில் மத்திய அரசு வேண்டும் என்றே தாமதம் செய்வதாகக் குற்றம்சாட்டி தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் இந்த வழக்கில் ஆஜரானார். முன்னர் நடைபெற்ற விசாரணையின்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, லோக்பால் உறுப்பினர்கள் தேர்வு குழுவை அமைக்க கூடுதலான கால அவகாசம் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன? என்று கேள்வி எழுப்பியது. இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், எல்.என். ராவ், எஸ்.கே.கெளல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. 
அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், போதுமான உள்கட்டமைப்பு வசதி இல்லாதது, பணியாளர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் லோக்பால் உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழு, பரிந்துரை செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது என்று தெரிவித்தார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், லோக்பால் உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் குழு உறுப்பினர்கள் குறித்த விவரங்களைக் கூட வலைதளத்தில் மத்திய அரசு வெளியிடவில்லை என்று மீண்டும் குற்றம்சாட்டினார்.
அவரை இடைமறித்த தலைமை நீதிபதி, தேர்வுக் குழு தலைவரை ஐயம் கொள்ள வேண்டியதில்லை; எப்போதும் எதிர்மறை சிந்தனை கொள்ளத் தேவையில்லை என்று கூறினார். 
இதையடுத்து, அடுத்த விசாரணை மார்ச் 7-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்த நீதிபதிகள், லோக்பால் உறுப்பினர் தேர்வு செய்யும் குழு, உறுப்பினர்களின் பெயர் களை அதற்குள் பரிந்துரைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com