ஹெலிகாப்டரிலிருந்து ஏவுகணை தாக்குதல்: சோதனை வெற்றி

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் (ஹெச்ஏஎல்) தயாரிக்கப்பட்ட இலகு ரக போர் ஹெலிகாப்டரிலிருந்து ஏவுகணையை செலுத்தி தாக்குதல் நடத்தும்
ஹெலிகாப்டரிலிருந்து ஏவுகணை தாக்குதல்: சோதனை வெற்றி


ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் (ஹெச்ஏஎல்) தயாரிக்கப்பட்ட இலகு ரக போர் ஹெலிகாப்டரிலிருந்து ஏவுகணையை செலுத்தி தாக்குதல் நடத்தும் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஹெலிகாப்டர், வானிலிருந்து வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாகும். சியாச்சின் பனிமலை போன்ற மிக அதிக உயரமுள்ள இடங்களில் கூட இயங்கும் வல்லமை, உலக அளவில் இந்த ஹெலிகாப்டருக்குதான் உள்ளது. மேலும், ஹெலிகாப்டரிலிருந்து வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டது நாட்டிலேயே இதுவே முதல் முறையாகும்.
இதுதொடர்பாக ஹெச்ஏஎல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஒடிஸா மாநிலம், சந்திப்பூரிலுள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் அண்மையில் இலகு ரக போர் ஹெலிகாப்டரிலிருந்து ஏவுகணையை செலுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, வானில் பறந்தபடியே, வானில் உள்ள இலக்கை இந்த ஹெலிகாப்டர் துல்லியமாக தாக்கி அழித்தது. இச்சோதனையை, விமானப் படை முன்னாள் தளபதியும் ஹெச்ஏஎல் நிறுவன பரிசோதனை விமானியுமான சுபாஷ் பி ஜான், ஹெச்ஏஎல் விமான பரிசோதனை பொறியாளர் ரஞ்ஜித் சிடாலே, இந்திய விமானப் படை பரிசோதனை விமானி ராஜீவ் துபே ஆகியோர் மேற்கொண்டனர்.
இந்த ஹெலிகாப்டரில், 20 மி.மீ. விட்டம் கொண்ட குண்டுகளை செலுத்தும் திறன்கொண்ட தானியங்கி சுழல் துப்பாக்கிகளும், 70 மி.மீ. விட்டம் கொண்ட எறிகணைகளை (ராக்கெட்) செலுத்தும் திறன்கொண்ட அமைப்பும் உள்ளன. இந்த ஆயுதச் சோதனைகள், கடந்த ஆண்டில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது ஏவுகணையை செலுத்தும் சோதனையும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1999-இல் நிகழ்ந்த கார்கில் போருக்கு பிறகு, இலகு ரக போர் ஹெலிகாப்டர்களின் தேவை இந்திய ராணுவத்துக்கு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த ரக ஹெலிகாப்டர்கள் தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ஹெச்ஏஎல் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் ஆய்வு மற்றும் வடிவமைப்பு மையத்தால், இலகு ரக ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஹெலிகாப்டர்கள் விரைவில் ராணுவத்தில் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
ஹெச்ஏஎல் நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அந்த நிறுவனத்திடமிருந்து 83 இலகு ரக போர் விமானங்கள், 15 இலகு ரக ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கான உத்தரவு இறுதி கட்டத்தில் உள்ளதாகவும்; அது கிடைக்கப் பெறும்போது தங்களது நிறுவனத்தின் நிதி நிலைமை மேம்படும் என்றும் ஹெச்ஏஎல் தெரிவித்துள்ளது. தற்போதைய நிதித் தேவைகளை எதிர்கொள்வதற்காக ரூ.962 கோடி கடன் பெற்றுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com