10% இடஒதுக்கீடு அமல்: அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் மத்திய அரசு சுற்றறிக்கை

பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை, ஜூன் மாதம் தொடங்கும் கல்வியாண்டு (2019-20) முதலே மாணவர்சேர்க்கையில் அமல்படுத்துமாறு அனைத்து கல்வி
10% இடஒதுக்கீடு அமல்: அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் மத்திய அரசு சுற்றறிக்கை

பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை, ஜூன் மாதம் தொடங்கும் கல்வியாண்டு (2019-20) முதலே மாணவர்சேர்க்கையில் அமல்படுத்துமாறு அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
மகாராஷ்டிர மாநிலம் புணேவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஐஐடி-க்கள், ஐஐஎம்-கள், மத்திய பல்கலைக்கழகங்கள், தனியார் கல்லூரிகள் உள்ளிட்டவற்றுக்கு இதுதொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது' என்று கூறினார்.
மேலும், இந்த அமலாக்கம் குறித்த உத்தரவு அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், இதர இடஒதுக்கீடு பிரிவுகள் பாதிக்கப்படாத வகையில், இந்த 10 சதவீத இடஒதுக்கீடு முறையை அமல்படுத்துவது தொடர்பான நடைமுறைகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் மக்களுக்கு, கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில், மத்திய அரசால் 124-ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. 
இந்த மசோதா, மக்களவையில் கடந்த 8ஆம் தேதியும், மாநிலங்களவையில் 9-ஆம் தேதி சுமார் 8 மணி நேர விவாதத்துக்குப் பிறகும் நிறைவேறியது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறிய அந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 12-ஆம் தேதி ஒப்புதல் வழங்கினார்.
பின்னர், 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான உத்தரவு மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் சார்பில் கடந்த 14-ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. இதையடுத்து, பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்போருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டம், நாடு முழுவதும் கடந்த 14-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
இந்த இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தும் வகையில், 40,000 கல்லூரிகளில் நிகழாண்டிலேயே 10 சதவீதம் கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்துக்கு இதுவரை, பாஜக ஆளும் குஜராத், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேச மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், 10 சதவீத இடஒதுக்கீடு 2019-20 கல்வியாண்டிலேயே அமலுக்கு வருவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு மாற்று இல்லை: முன்னதாக, மக்களவைத் தேர்தல் சூழல் குறித்து பேசிய பிரகாஷ் ஜாவடேகர், நரேந்திர மோடிக்கு பதிலாக பிரதமர் பதவிக்கு வரும் வகையில் எதிர்க்கட்சிகள் தரப்பில் தகுதியுடைய மாற்று நபர்கள் எவரும் இல்லை என்று கூறினார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது: 
வரும் மக்களவைத் தேர்தலானது, நாட்டு மக்கள் பலமான அரசை விரும்புகிறார்களா? பலவீனமான அரசை விரும்புகிறார்களா? என்பதை அடிப்படையாகக் கொண்டதாகும்.
கொல்கத்தாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் மாநாட்டின் ஒரே நோக்கம் என்பது, பிரதமர் பதவியிலிருந்து நரேந்திர மோடியை அகற்றுவது என்பதுதான். ஆனால், அவருக்கு மாற்று என யார் இருக்கின்றனர்? எதிர்க்கட்சியினரால் அவ்வாறு தகுதியுடைய மாற்று நபரை குறிப்பிட இயலாது. எனவே, நாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இல்லாவிட்டால், அராஜகம் அதிகரித்துவிடும் என்று பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.
முன்னாள் பிரதமர்கள் ஐ.கே. குஜ்ரால், சந்திரசேகர், ஹெச்.டி. தேவெகெளடா ஆகியோரது கூட்டணி ஆட்சியை குறிப்பிட்டு பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது: 
அப்போதைய பலவீனமான அரசுகளின் ஆட்சியில் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். ஆனால், இப்போது பிரதமர் மோடி தலைமையிலான அரசின் பலமான, கொள்கையை நோக்கிய ஆட்சியின் பலனை மக்கள் அனுபவித்துள்ளனர். எனவே, பலமான ஆட்சி வேண்டுமா? பலவீனமான ஆட்சி வேண்டுமா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.
எதிர்க்கட்சிகள், மக்களவைத் தேர்தலுக்கான அறிக்கையை தயாரிப்பதற்கோ, முன்னேற்பாடு நடவடிக்கைகளுக்கோ குழு அமைத்ததாகத் தெரியவில்லை. ஆனால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக குழு அமைத்துள்ளனர். இதுவே, அவர்கள் பதட்டத்துடன் இருப்பதையும், தாங்கள் எதிர்நோக்கும் தோல்விக்கான காரணத்தை இப்போதே தேடத் தயாராகியிருப்பதையும் காட்டுகிறது.
தாங்கள் ஊழலில் ஈடுபட வேண்டும் என்பதற்காகவே, காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் பலவீனமான ஆட்சி அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால் நாட்டு மக்களோ, ஊழலை ஒழிக்கும், அதில் தொடர்புடையவர்களுக்கு தண்டனை அளிக்கும் பிரதமர் மோடி அரசைப் போன்ற பலமான அரசையே எதிர்பார்க்கின்றனர்.
கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 282 தொகுதிகளை வென்றிருந்தது. வரும் மக்களவைத் தேர்தலில் அந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். அத்துடன் பாஜகவுக்கான வாக்கு வங்கியும் உயரும். 
அதாவது, மேற்கு வங்கம், ஒடிஸா, வடகிழக்கு மாநிலங்களில் பாஜக அதிக தொகுதிகளை கைப்பற்றும். வரும் நாள்களில் "எனது வீடு; பாஜகவின் வீடு' என்ற பெயரிலான பிரசாரம் ஒன்றை தொடங்க உள்ளோம். அப்போது, பாஜகவுக்கு ஆதரவளிப்போர், வாக்களிக்க விரும்புவோர் தங்களது வீட்டின் மேல் பாஜக கொடி ஏற்றப்படும்.
அடுத்த 3 மாதங்களில் நாட்டிலுள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடி அளவிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடந்த நான்கரை ஆண்டுகள் மேற்கொண்ட பணிகள், எதிர்க்கட்சிகளின் வெற்று அரசியல் தொடர்பாக பிரசாரம் செய்யப்படும் என்று பிரகாஷ் ஜாவடேகர் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com