கர்நாடகா அரசியலில் பரபரப்பு: இன்று மீண்டும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்- சித்தராமையா அவசர அழைப்பு 

கர்நாடகாவில் இன்று மீண்டும் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்திற்கு முன்னாள் முதல்வர் சித்தராமையை அழைப்பு
கர்நாடகா அரசியலில் பரபரப்பு: இன்று மீண்டும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்- சித்தராமையா அவசர அழைப்பு 


பெங்களூரு: கர்நாடகாவில் இன்று மீண்டும் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்திற்கு முன்னாள் முதல்வர் சித்தராமையை அழைப்பு விடுத்துள்ளார். 

சட்டப்பேரவைத் தேர்தல்களில் எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை பலம் கிடைக்காதபோது, 2004-ஆம் ஆண்டு முதல் கேளிக்கை விடுதி அரசியலில் ஈடுபடுவதை கர்நாடக அரசியல் கட்சிகள் வழக்கமாகக் கொண்டுள்ளன. 2006-ஆம் ஆண்டில் எச்.டி.குமாரசாமி, 2008-இல் எடியூரப்பா ஆட்சிகளின் போது அடிக்கடி கேளிக்கை விடுதிக்கு எம்எல்ஏக்களை அழைத்துச் செல்லும் அரசியல் சூழ்நிலை காணப்பட்டு வந்தது. எடியூரப்பா ஆட்சிக் காலத்தில் பாஜக எம்எல்ஏக்கள் குழுக்களாகப் பிரிந்து அடிக்கடி கட்சிக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திக் கொண்டு கேளிக்கை விடுதியில் தஞ்சம் அடைந்து விடுவார்கள். 2011-இல் ஜெகதீஷ் ஷெட்டரை முதல்வராக்காமல் சதானந்த கெளடாவை முதல்வராக்க வலியுறுத்தியும், 2012-இல் சதானந்த கெளடாவை நீக்கிவிட்டு ஜெகதீஷ் ஷெட்டரை முதல்வராக்க வலியுறுத்தியும் பாஜக எம்எல்ஏக்களை கேளிக்கை விடுதியில் தங்கவைத்தவரே எடியூரப்பாதான். 

எடியூரப்பாவுக்கு எதிராக சுரங்க அதிபர்கள் ஜனார்த்தன ரெட்டி, ஸ்ரீராமுலு உள்ளிட்டோர் கொதித்தெழுந்தபோதும் கேளிக்கை விடுதி அரசியல் தலைவிரித்தாடியது. பாஜக எம்எல்ஏக்களை ஜனார்த்தன ரெட்டி ஹைதராபாத்தில் தங்கவைத்திருந்தார். 2017-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் மாநிலங்களவைத் தேர்தல் நடந்தபோது, தனது எம்எல்ஏக்களை பாஜக இழுப்பதாகக் குற்றம்சாட்டிய காங்கிரஸ், தங்கள் கட்சியின் 44 எம்எல்ஏக்களை பெங்களூருக்கு அருகே பிடதியில் உள்ள கேளிக்கை விடுதியில் தங்க வைத்திருந்தது. இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் டி.கே.சிவக்குமார் செய்திருந்தார்.

மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசைக் கவிழ்த்துவிட்டு, பாஜக ஆட்சியை உருவாக்கத் திட்டமிட்டுள்ள அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் எடியூரப்பா, தங்கள் கட்சி எம்எல்ஏக்களை ஹரியாணா மாநிலத்தின் குரு கிராமத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கவைத்திருந்தார். 5 நாள்களாக அங்கு தங்கியுள்ள பெரும்பாலான பாஜக எம்எல்ஏக்கள் சனிக்கிழமை பெங்களூருக்கு திரும்பினார்கள். காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகளிடம் இருந்து தங்கள் எம்எல்ஏக்களைப் பாதுகாக்கவே ஹரியாணாவில் தங்கியிருப்பதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதனிடையே, பெங்களூரில் வெள்ளிக்கிழமை காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுக் கூட்டத்தை நடத்திய அந்தக் குழுவின் தலைவர் சித்தராமையா, தங்கள் கட்சியின் 76 எம்எல்ஏக்கள் பெங்களூருக்கு வெளியே பிடதியில் உள்ள ஈகிள்டன் கேளிக்கை விடுதியில் தங்கவைக்கப்பட்டனர். மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்க கேளிக்கை விடுதியில் தங்கியுள்ளதாக காங்கிரஸ் விளக்கமளித்தது. எத்தனை நாள்களுக்கு கேளிக்கை விடுதியில் தங்கவைக்கப்படுவார்கள் என்று தெரியாதநிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்களிடையே சனிக்கிழமை இரவு நடைபெற்ற கைகலப்பில், காயமடைந்த எம்எல்ஏ ஆனந்த்சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி கர்நாடக அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், பெங்களூரில் இன்று காலை 11 மணிக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். அனைத்து எம்எல்ஏக்களும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, நடத்தப்பட்ட எம்எல்ஏக்கள் கூட்டத்தை புறக்கணித்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 4 பேரிடமும் விளக்கம் கேட்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

ஆட்சி அதிகார சண்டையாக இருந்தாலும், உள்கட்சி சண்டையாக இருந்தாலும் கர்நாடகத்தின் முக்கியக் கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும் கேளிக்கை விடுதி அரசியலில் ஈடுபடுவது மக்களின் முகத்தை சுளிக்கவைத்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com