ஜம்மு-காஷ்மீரில் பாஜக நிலையான ஆட்சியமைக்கும்: ராம் மாதவ் நம்பிக்கை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாஜக தனித்துப் போட்டியிட்டு, தேவைப்பட்டால் சில நண்பர்களின் உதவியோடு நிலையான ஆட்சியமைக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ராம் மாதவ் ஞாயிற்றுக்கிழமை நம்பிக்கை தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக நிலையான ஆட்சியமைக்கும்: ராம் மாதவ் நம்பிக்கை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாஜக தனித்துப் போட்டியிட்டு, தேவைப்பட்டால் சில நண்பர்களின் உதவியோடு நிலையான ஆட்சியமைக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ராம் மாதவ் ஞாயிற்றுக்கிழமை நம்பிக்கை தெரிவித்தார். 
இதுகுறித்து மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜம்மு காஷ்மீரில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலின்போது அனைத்து தொகுதிகளிலும் பாஜக போட்டியிடும். தேர்தலுக்கு முன்பு கூட்டணி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகவே உள்ளன.
இருப்பினும், ஜம்மு காஷ்மீர் தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று சில நண்பர்களின் உதவியோடு நிலையான ஆட்சியை அமைக்கும். ஒருவேளை மாநிலத்தில் சூழ்நிலை மாறினாலும், நாங்கள் மற்ற கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்கத் தயக்கம் காட்ட மாட்டோம். தேர்தலின்போது தனித்துப் போட்டியிடுவோம். தேர்தலுக்குப் பிறகு கூட்டணி ஆட்சியே அமையும். 
வரும் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பிரசாரத்தை தொடங்கி வைக்க பிரதமர் மோடி பிப்ரவரி 3ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வருகை தர உள்ளார். அநேகமாக, மக்களவைத் தேர்தல் ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெற வாய்ப்புள்ளது. இத்தேர்தலுடன், சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றால் இரண்டையும் எதிர்கொள்ள பாஜக தயாராகவே உள்ளது. காஷ்மீரில் பேரவைத் தேர்தல் முன்கூட்டியே வருவதை பாஜக விரும்பவில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது. மற்ற கட்சிகள்தான் தேர்தலை கண்டு அஞ்சுகின்றன. 
காஷ்மீரில் பண்டிட்டுகள் மீண்டும் குடியேறி அவர்களின் புனர்வாழ்வுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதிலும் பாஜக முக்கியப் பங்கு வகிக்கும். 
காஷ்மீர் பள்ளத்தாக்கின் 5 இடங்களில் பண்டிட்டுகளுக்கு தனி  நகர்ப்பகுதி உருவாக்கித் தருவதாக அளித்த வாக்குறுதி பல்வேறு பாதுகாப்பு காரணங்களுக்காக நிறைவேற்றப்படவில்லை. காஷ்மீரின் நிலைமை மேம்பட்டு விரைவில் பண்டிட்டுகளும் அமைதியாக வசிப்பதற்கான சூழல் ஏற்படுத்தித் தரப்படும் என்று தெரிவித்தார். 
பிப்.3இல் பிரதமர் மோடி காஷ்மீர் வருகை: காஷ்மீரில் எய்ம்ஸ் மருத்துவமனை, ஐஐஎம், ஐஐடி, ஜம்மு-அக்நூர் சாலை, ஷாபூர்- கண்டி சாலை ஆகிய திட்டங்களின் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக பிப்ரவரி 3ஆம் தேதி பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வருகை தர உள்ளார். மொத்தம் ரூ.35 ஆயிரம் கோடி மதிப்புள்ள நலத்திட்டப்பணிகளின் அடிக்கல் நாட்டு விழாவில் அவர் பங்கேற்கிறார். மேலும், ரூ.9 ஆயிரம் கோடி செலவிலான இதர திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார் என ராம் மாதவ் மேலும் தெரிவித்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com