மக்களவைத் தேர்தலில் பதிலி வாக்காளர்கள்: மாநிலங்களவையில் நிறைவேறுமா மசோதா?

வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ), மக்களவைத் தேர்தலில் பதிலி வாக்காளர்கள் மூலம் ஜனநாயகக் கடமையாற்ற வகை செய்யும் சட்ட மசோதாவை பட்ஜெட் கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில்
மக்களவைத் தேர்தலில் பதிலி வாக்காளர்கள்: மாநிலங்களவையில் நிறைவேறுமா மசோதா?

வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ), மக்களவைத் தேர்தலில் பதிலி வாக்காளர்கள் மூலம் ஜனநாயகக் கடமையாற்ற வகை செய்யும் சட்ட மசோதாவை பட்ஜெட் கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் நிறைவேற்றும் முனைப்பில் மத்திய சட்ட அமைச்சகம் உள்ளது. 

இந்த மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது மாநிலங்களவை ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. 

வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த மசோதா முக்கியத்துவம் பெறுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரானது வரும் 31-ஆம் தேதி முதல் பிப்ரவரி 13-ஆம் தேதி வரை 11 அமர்வுகளாக நடைபெறவுள்ளது. இது, தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான மத்திய அரசின் கடைசி நாடாளுமன்ற கூட்டத்தொடராகும்.


இதுதொடர்பாக சட்டத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "நிலுவையில் உள்ள அனைத்து மசோதாக்களையும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்ற முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதில், பதிலி வாக்குகள் தொடர்பான சட்ட மசோதா, மாநிலங்களவையின் அன்றாட அலுவல்களில் பட்டியலிடப்பட்டுள்ளது' என்றார். 

பதிலி வாக்குகள் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறி சட்டமாகும் பட்சத்தில், வாக்களிக்கும் தகுதியுடைய வெளிநாடு வாழ் இந்தியர்கள், தேர்தலின்போது வாக்குகளை பதிவு செய்ய தங்களுக்கான பிரதிநிதி ஒருவரை நியமித்துக்கொள்ளலாம். அந்த பதிலி வாக்காளர்கள் ஒவ்வொரு தேர்தலுக்கும் மாறுபடலாம்.

தற்போதைய நிலையில், வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் தேர்தலில் வாக்களிக்க விரும்பினால், அவர் தன்னை ஒரு வாக்காளராக பதிவு செய்து, இந்தியாவுக்கு வந்து, தனது தொகுதியில் கடவுச்சீட்டை அடையாள அட்டையாகக் கொண்டு வாக்களிக்க வேண்டும்.

பதிலி வாக்குகளுக்கு அனுமதி அளித்துள்ள தேர்தல் ஆணைய நிபுணர் குழுவானது, வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்குப்பதிவு செய்யும் வாய்ப்பை மறுத்துள்ளது. வெளியுறவு அமைச்சகம் மதிப்பிட்டுள்ளதன்படி, தற்போது சுமார் 3.10 கோடி வெளிநாடு வாழ் இந்தியர்கள் உலகெங்கிலும் வசித்து வருகின்றனர்.

சர்வீஸ் வாக்காளர்களுக்கான பாலினச் சமநிலை: "சர்வீஸ் வாக்காளர்' பிரிவின் கீழ், சம்பந்தப்பட்ட வாக்காளரின் மனைவி/கணவன் இருவரும்

வாக்களிக்க அனுமதிக்கும் வகையிலும் சட்டத் திருத்த மசோதா கொண்டுவரப்படுகிறது. 

தற்போதைய நிலையில், ராணுவ வீரர் ஒருவரின் மனைவி "சர்வீஸ் வாக்காளர்'-ஆக கணக்கில் கொள்ளப்பட்டு கணவருக்குப் பதில் அவர் வாக்களிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், ராணுவத்தில் உள்ள பெண் அதிகாரிகளின் கணவர்களுக்கு அவ்வாறு அனுமதி அளிக்கப்படுவதில்லை. 
எனவே, சர்வீஸ் வாக்காளர்கள் தொடர்பான சட்டத்தில் "மனைவி' என்ற வார்த்தைக்கு பதிலாக, "வாழ்க்கைத் துணைவர்' என்று திருத்தம் கொண்டுவரும் மசோதாவும் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. 

ஆயுதப் படை, மத்திய ஆயுத காவல் படை, வெளிமாநிலங்களில் பணியிலிருக்கும் மாநில காவல் படை, வெளிநாடுகளில் பணியிலிருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் (தூதர்) போன்றவர்கள் "சர்வீஸ் வாக்காளர்கள்' வாய்ப்பு மூலமாக ஜனநாயகக் கடமையாற்ற அனுமதிக்கப்படுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com