ரூ.6,600 கோடியில் 118 போர் டாங்கிகள்: ஆவடியில் தயாரிக்க முடிவு

இந்திய ராணுவத்துக்காக புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள அர்ஜூன் மார்க்-1 ஆல்பா ரக போர் டாங்கிகளை தயாரிக்கும் பணி சென்னை ஆவடி கனரக வாகனத் தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்துக்காக புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள  அர்ஜூன் மார்க்-1 ஆல்பா ரக போர் டாங்கி.
இந்திய ராணுவத்துக்காக புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள  அர்ஜூன் மார்க்-1 ஆல்பா ரக போர் டாங்கி.

இந்திய ராணுவத்துக்காக புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள அர்ஜூன் மார்க்-1 ஆல்பா ரக போர் டாங்கிகளை தயாரிக்கும் பணி சென்னை ஆவடி கனரக வாகனத் தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, ரூ.6,600 கோடி மதிப்பில் 118 போர் டாங்கிகள் மற்றும் அதன் உதிரிபாகங்கள் தயாரித்து வழங்கப்பட உள்ளன. 
இந்த புதிய போர் டாங்கியின் மாதிரியை திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை கட்டமைப்பு திட்டத் தொடக்க விழாவில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில், பாதுகாப்புத் துறைச் செயலர் ஜி. சதீஷ் ரெட்டி, மத்திய படைக்கலை தொழிற்சாலை நிறுவன நிர்வாக இயக்குநர் சௌரப் குமாரிடம் வழங்கினார்.
இந்த புதிய டாங்கியின் சிறப்புகள் குறித்து, மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானி டி. பன்னீர்செல்வம் கூறியது:
68 டன் எடை கொண்ட இந்த புதிய போர் டாங்கியானது, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ராணுவ எல்லைப் பகுதிக்கு கடந்த டிசம்பர் மாதம் கொண்டு செல்லப்பட்டு வெள்ளோட்டம் காணப்பட்டது. 
வில்வித்தையில் அர்ஜூனனுக்கு  நிகரானவர் எவரும் இல்லை.  வைத்த குறி தப்பாது என்பதை போல இந்த டாங்கியின் குறியும் தப்பாமல் இலக்கை சென்று தாக்கும். எனவேதான், இந்த புதிய டாங்கிக்கும்  அர்ஜூன் மார்க் 1 ஆல்பா ரகம் என பெயரிடப்பட்டுள்ளது. இதில், பல்வேறு சிறப்புகள் உள்ளன.
டாங்கியில் உள்புறம் அமர்ந்த கொண்டு 360 டிகிரி கோணத்தில் இரவும், பகலும் எதிரேயுள்ள இலக்கை மிக துல்லியமாகப் பார்வையிட முடியும். காற்றின் வேகம், சீதோஷண நிலை, புகை மூட்டம், வெப்பம், குளிர் என அனைத்தையும் துல்லியமாக கணிக்கும். டாங்கி எப்படி குலுங்கினாலும் அதன் பீரங்கி முனையாக குறி வைத்த நிலையிலிருந்து சிறிதுகூட வலுவாத வகையில் இருப்பது இதன் தனிச்சிறப்பாகும். மேலும், எதிரேயிருந்து வரும் லேசர் தாக்குதலைத் தடுத்து டாங்கியை பாதிக்காத வகையில் திசை திருப்பும் சிறப்பு தொழில்நுட்பமும் இணைக்கப் பெற்றுள்ளது. 
சாலையில் 58 கி.மீ. வேகத்திலும்,  இதர இடங்களில் 40 கி.மீ. வேகத்தில் செல்லும். 1030 கிலோவாட் திறன் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இருபுறமும் இணைந்து திருப்பக்கூடி ஸ்டியரிங் வசதியும், ஹைட்ராலிக் வசதியும் உள்ளது. இந்த டாங்கியில் பொருத்தப்பட்டுள்ள துப்பாக்கி கன் 120 எம்.எம் ரைபிள் ரகமாகும். 
இவைத்தவிர 7.62 எம்.எம் அளவுடைய மெஷின் கன், 12.7 எம். எம் அளவுள்ள ஏர்கிராப்ட் மிஷின் கன் இணைக்கப்பட்டுள்ளது. தானியங்கி இலக்கு தேர்வு,  ஓட்டுநரைப் பாதுகாத்தல், ரிமோட் கன்ட்ரோல் என பல்வேறு தொழில்நுட்பங்கள்,  பல்வேறு சிறப்புகள் ஒருங்கே அமையப்பெற்றுள்ளன.
இந்த டாங்கிகளை தயாரிக்கும் பணி ஆவடி கனரக வாகனத் தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த டாங்கிகளுக்கான சிறிய அளவிலான உதிரிபாகங்களைத் தயாரிக்க தமிழகத்தைச் சேர்ந்த சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன. 
முதல்கட்டமாக ரூ.6,600 கோடி மதிப்பில் 118 டாங்கிகள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கப்படவுள்ளன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com