பாஜகவின் ஊழல் இல்லாத ஆட்சி: பிரதமர் மோடி பெருமிதம்

முந்தைய ஆட்சியில் மக்களுக்காக அரசு செலவிடும் பணம் அவர்களுக்கு முழுமையாகச் சென்றடையவில்லை என்று தெரிந்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
வாராணசியில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய வெளிநாடுவாழ் இந்தியர்கள் மாநாட்டில் பங்கேற்பாளர்களின் வாழ்த்துகளை ஏற்றுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, மோரீஷஸ் பிரதமர்
வாராணசியில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய வெளிநாடுவாழ் இந்தியர்கள் மாநாட்டில் பங்கேற்பாளர்களின் வாழ்த்துகளை ஏற்றுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, மோரீஷஸ் பிரதமர்

முந்தைய ஆட்சியில் மக்களுக்காக அரசு செலவிடும் பணம் அவர்களுக்கு முழுமையாகச் சென்றடையவில்லை என்று தெரிந்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால், இப்போதைய பாஜக அரசு, ஊழலை ஒழித்து வெளிப்படையான நிர்வாகத்தை அளித்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் மோடியின் தொகுதியான வாராணசியில் 15-ஆவது வெளிநாடுவாழ் இந்தியர்கள் (பிரவாசி பாரதிய திவஸ்) மாநாடு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மோரீஷஸ் பிரதமர் பிரவீண் ஜகந்நாத் தலைமை விருந்தினராகப் பங்கேற்ற இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்த மோடி, காங்கிரஸ் கட்சியையும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியையும் பெயர் குறிப்பிடாமல் விமர்சித்தார். அவர் பேசியதாவது:
நமது நாட்டை பல ஆண்டுகளாக ஆட்சி செய்த கட்சி (காங்கிரஸ்), அரசு நிர்வாகத்துக்கென்று ஒரு மோசமான அமைப்பையே உருவாக்கி வைத்திருந்தது. அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமரும் (ராஜீவ் காந்தி) அதனை ஒப்புக் கொண்டு, மத்திய அரசு மக்களுக்காக ஒரு ரூபாய் செலவு செய்தால், அதில் 15 பைசா மட்டுமே மக்களைச் சென்றடைகிறது என்று கூறினார்.
மக்கள் நலனுக்காக அரசு செலவிடும் பணம் முழுமையாக அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்று தெரிந்தும், அதைத் தடுக்க முந்தைய அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. நோய் இருக்கிறது என்று தெரிந்தும் அதனை நீக்க எந்தவித நடவடிக்கையையும் எடுக்காதவர்களை என்னவென்று சொல்வது?
நேரடி மானியத் திட்டம்: முந்தைய ஆட்சியில் நாட்டில் நேர்மையாக வரி செலுத்தும் நடுத்தர மக்களின் பணத்தில் 85 சதவீதம் ஊழல்கள் மூலம் கொள்ளையடிக்கப்பட்டு வந்தது. 
ஆனால், இப்போதைய மத்திய அரசு, ஊழலை ஒழித்து வெளிப்படையான நிர்வாகத்தை அளித்து வருகிறது. 
நேரடி மானியத் திட்டத்தின் மூலம் ரூ.5.8 லட்சம் கோடி பணம் மக்களின் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. 
எரிவாயு சிலிண்டர் மானியத்துக்கான தொகை முதல் வீடு கட்டுவதற்கான மானியம் வரை அனைத்து தொகைகளும் மக்களின் வங்கிக் கணக்கில் ஒரு பைசா கூட குறையாமல் செலுத்தப்படுகிறது.
போலிகள் களையெடுப்பு: இந்த நேரடி மானியத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தாமல், பழைய முறையையே பின்பற்றி இருந்தால், ரூ.5.8 லட்சம் கோடியில் ரூ.4.5 லட்சம் கோடி ஊழல் முறைகேடுகளால் மக்களுக்குச் சென்றடையாமல் நடுவிலேயே பறிக்கப்பட்டிருக்கும். நேரடி மானியத் திட்டத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே இதற்கு முன்பு இருந்த அரசுகள் செயல்படுத்தி இருக்க முடியும். ஆனால், அவர்கள் வேண்டுமென்றே இதனைச் செயல்படுத்தாமல் இருந்தார்கள். எரிவாயு சிலிண்டர் முதல் பல்வேறு மானியங்களை 7 கோடிக்கும் மேற்பட்டோர் போலியான ஆவணங்கள் மூலம் பெற்று வந்தது கண்டறியப்பட்டு, அவை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான சிறந்த மாற்றங்கள் ஏதும் நடைபெறாது என்ற எண்ணத்தை மாற்றியது இப்போதைய மத்திய அரசுதான் என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டர், உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், உத்தரப் பிரதேச ஆளுநர் ராம் நாயக், வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே. சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மோடி - மோரீஷஸ் பிரதமர் பேச்சு: மாநாட்டின் ஒரு பகுதியாக மோரீஷஸ் பிரதமர் பிரவீண் ஜகந்நாத், பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது, இரு நாடுகள் இடையே பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இது தொடர்பாக விரைவில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

மோரீஷஸ் பிரதமர் பாராட்டு
இந்த நிகழ்ச்சியில் பேசிய மோரீஷஸ் பிரதமர் பிரவீண் ஜகந்நாத், இந்தியாவில் பல சிறப்பு வாய்ந்த சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தியதன் மூலம் மத்திய அரசு சிறப்பான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வகையில் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற முனைப்பில் சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டமைப்பில் பிரதமர் மோடி கொண்டுள்ள முயற்சிகள் மிகவும் பாராட்டத்தக்கவை என்றார்.

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு விரைவில் இ-பாஸ்போர்ட்
வெளிநாடுவாழ் இந்தியர்களின் பங்களிப்பு குறித்து பேசிய மோடி, பல துறைகளில் இந்தியாவின் சிறப்பான பங்களிப்பு சர்வதேச அளவில் அங்கீகாரத்தைப் பெற்று வருகிறது. வெளிநாடுவாழ் இந்தியர்கள் என்பவர்கள் இந்தியாவின் தூதர்கள். நமது நாட்டின் திறமையை பல்வேறு நாடுகளில் பிரதிபலித்து வருகின்றனர். புதிய இந்தியாவை உருவாக்கும் பணியில் அவர்களின் பங்களிப்பு முக்கியமானது. இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்த வெளிநாடுவாழ் இந்தியர்களின் உதவி அதிகம் தேவைப்படுகிறது.
அவர்கள் இந்தியாவுக்கு வந்து செல்ல வசதியாக விசா நடைமுறைகள் எளிமையாகப்பட்டுள்ளன. வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு மின்னணு கடவுச்சீட்டு (இ-பாஸ்போர்ட்) விரைவில் அளிக்கப்படும். இதற்காக அனைத்து நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களும், துணைத் தூதரகங்களும் இணைக்கப்படும். இதன் மூலம் கடவுச்சீட்டு முறையும் ஒருங்கிணைக்கப்படும். இந்திய வம்சாவளியினர் என்பதற்கான அடையாள அட்டை, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வழங்கப்படும் குடியுரிமை, நுழைவு இசைவு (விசா) ஆகியவற்றை சமூக பாதுகாப்புத் திட்டத்துடன் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com