பாஜகவை வீழ்த்தவே காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கவில்லை: அகிலேஷ் யாதவ்

பாஜகவை வீழ்த்துவதற்காகவே சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கட்சிகளின் கூட்டணியில் காங்கிரஸை இணைத்துக்கொள்ளவில்லை என்று சமாஜவாதி கட்சித்
பாஜகவை வீழ்த்தவே காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கவில்லை: அகிலேஷ் யாதவ்


பாஜகவை வீழ்த்துவதற்காகவே சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கட்சிகளின் கூட்டணியில் காங்கிரஸை இணைத்துக்கொள்ளவில்லை என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு உத்தரப் பிரதேசத்தில் பெரும்பான்மை தொகுதிகளைக் கைப்பற்றுவது அவசியமானது.
மாநிலத்தில் சமாஜவாதி கட்சி ஆட்சியில் இருந்தபோது, மக்களுக்குப் பல்வேறு நலத்திட்டங்களைச் செய்தோம். 
இருந்தபோதிலும், கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸுடன் கூட்டணி அமைத்ததால், அத்தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியவில்லை. 
இதனைக் கருத்தில்கொண்டே, மக்களவைத் தேர்தலுக்கான சமாஜவாதி-பகுஜன் சமாஜ்-ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சிகளின் கூட்டணியில் காங்கிரஸை இணைத்துக்கொள்ளவில்லை.
பாஜகவை வீழ்த்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன் காரணமாகவே, காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு தொகுதிகளை ஒதுக்கினோம். 
ஆனால், அவர்கள் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளனர். அவர்கள் 80 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டாலும், சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு மக்களிடையே உள்ள செல்வாக்கு குறையப்போவதில்லை. 
காங்கிரஸ் கட்சியின் மீதும், அதன் தலைவர் ராகுல் காந்தி மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. கடந்த காலத்தில் காங்கிரஸுடன் சமாஜவாதி நல்லுறவைப் பேணியுள்ளது. 
தேர்தல் கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறாதபோதும், சமாஜவாதி-காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையேயான உறவில் எந்தவிதப் பின்னடைவும் இருக்காது. 
தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து தற்போது கருத்து தெரிவிக்க இயலாது. தேர்தல் முடிவடைந்தபிறகு அது குறித்து முடிவு செய்யப்படும்.
நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படலாம். ஆனால், உத்தரப் பிரதேசத்திலிருந்து புதிய நபர் ஒருவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும். 
பிரதமராக விரும்புபவர்கள் எவரும் உத்தரப் பிரதேசத்தில் போட்டியிடவே விரும்புவார்கள் அல்லது மாநிலத்தில் பெரும்பான்மை தொகுதிகளைக் கைப்பற்ற முயற்சி செய்வார்கள் என்றார்.
பிரதமர் பதவிக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பெயரைப் பரிந்துரைப்பீர்களா? அல்லது திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியின் பெயரைப் பரிந்துரைப்பீர்களா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அது குறித்து தேர்தலுக்குப் பின் முடிவு செய்யப்படும் என்று அகிலேஷ் பதிலளித்தார்.
உத்தரப் பிரதேசத்திலுள்ள 80 மக்களவைத் தொகுதிகளில், சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கட்சிகள் தலா 38 தொகுதிகளில் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com