வாக்குப்பதிவு இயந்திர மோசடி குற்றச்சாட்டு குறித்து விசாரணை: கபில் சிபல் வலியுறுத்தல்

இந்தியாவில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த சையது சுஜா என்பவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து
வாக்குப்பதிவு இயந்திர மோசடி குற்றச்சாட்டு குறித்து விசாரணை: கபில் சிபல் வலியுறுத்தல்


இந்தியாவில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த சையது சுஜா என்பவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் வலியுறுத்தியுள்ளார்.
மின்னணு தொழில்நுட்ப நிபுணர் என்று கூறப்படும் சையது சுஜா, லண்டனில் இந்திய பத்திரிகையாளர்கள் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் ஸ்கைப் மூலம் திங்கள்கிழமை பேட்டியளித்தார். அப்போது, 
2014 மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி நடைபெற்றதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும், மத்திய அமைச்சராக இருந்த கோபிநாத் முண்டே, சாலை விபத்தில் மரணமடையவில்லை என்றும், வாக்குப்பதிவு இயந்திர மோசடியை அறிந்துகொண்டதால் அவர் கொலை செய்யப்பட்டார் என்றும் சையது சுஜா முன்வைத்த குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இப்பேட்டியின்போது, காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபலும் இருந்தார். இதனால், லண்டன் பேட்டி காங்கிரஸின் சதித் திட்டம் என்று பாஜக விமர்சித்தது. 
அதற்கு மறுப்பு தெரிவித்து, லண்டனில் செய்தியாளர்களிடம் கபில் சிபல் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. நமது நாட்டில் ஜனநாயகம் நிலைக்க வேண்டும் என்ற கவலையை முன்னிறுத்தும் இக்குற்றச்சாட்டுகள் மீது உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். 
யாரேனும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தால், அவை உண்மையா அல்லது பொய்யா என்பது குறித்து முதலில் விசாரணை நடத்த வேண்டும் என்றுதான் உச்சநீதிமன்றமும் நமது சட்டங்களும் கூறுகின்றன. தற்போது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய் என்றால், சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால், அது உண்மையென்றால் மிக தீவிரமான விஷயமாகும்.
லண்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நான் பங்கேற்றது குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால், ஏற்பாட்டாளரும் பத்திரிகையாளருமான ஆஷிஷ் ரே-யின் தனிப்பட்ட அழைப்பின் பேரிலேயே நான் கலந்துகொண்டேன்.
இந்த விவகாரத்தில், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ள கருத்துகள் பொறுப்பற்றவை; சிறுபிள்ளைதனமானவை. அத்தகைய கருத்துகள், அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என்றார் கபில் சிபல்.
கோபிநாத் முண்டே விவகாரம்: இதனிடையே, கோபிநாத் முண்டே மரணம் தொடர்பாக சையது சுஜா முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக கோவா மாநில காங்கிரஸ் தலைவர் கிரீஷ் சோடங்கர் கூறுகையில், வாக்குப்பதிவு இயந்திர மோசடி தொடர்பாக பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களின் பெயர்கள் அடிபட்டுள்ளன. 
நமது நாட்டின் ஜனநாயக கட்டமைப்பையே கேள்விக்குள்ளாக்கும் இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார். கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் பாஜகவை வெற்றி பெற்ற சில வாரங்களுக்கு பிறகு, கோபிநாத் முண்டே சாலை விபத்தில் உயிரிழந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com