
பிரியங்கா காந்தியின் அரசியல் பிரவேசம், காங்கிரஸுக்கு பலனளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. பிரியங்காவை, இந்திரா காந்தியின் மறுவுருவமாக மக்கள் காண்பர் என்று சிவசேனை கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சிவசேனையின் செய்தித் தொடர்பாளர் மணீஷா காயண்டே, பிடிஐ செய்தியாளரிடம் புதன்கிழமை கூறியதாவது:
பிரியங்கா காந்தி, நேரடி அரசியலில் ஈடுபட்டிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பலனளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவர், சிறந்த ஆளுமை குணம் உடையவர். இந்திரா காந்தியின் நற்பண்புகள், அவரிடம் உள்ளன. மக்கள் வாக்களிக்க செல்லும் போது, பிரியங்காவை இந்திரா காந்தியின் மறுவுருவமாக காண்பார்கள் என்றார் மணீஷா காயண்டே.
பிரியங்காவின் அரசியல் பிரவேசம் குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாஸ் மாலிக் கூறுகையில், காங்கிரஸில் பிரியங்காவுக்கு பொறுப்பு அளிக்கப்பட்டிருப்பது, அக்கட்சி தொண்டர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் நல்ல பலன்களை அறுவடை செய்யப் போகிறது. அந்த மாநிலத்தில் 20 முதல் 21 தொகுதிகளில் எளிதாக அக்கட்சி வெற்றி பெற வாய்ப்புள்ளது என்றார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது சகோதரி பிரியங்காவை, உத்தரப் பிரதேச கிழக்குப் பகுதி பொதுச் செயலாளராக நியமித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில், பிரியங்காவுக்கு அதிகாரப்பூர்வ பொறுப்பு அளிக்கப்பட்டிருப்பது, காங்கிரஸின் முக்கிய நகர்வாக கருதப்படுகிறது.