
காங்கிரஸ் கட்சியில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்காவுக்கு முக்கியப் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அரசியலுக்கு பிரியங்கா வருவது குறித்து பல ஆண்டுகளாக நிலவிய யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
உத்தரப் பிரதேச மாநில கிழக்குப் பகுதி பொதுச் செயலாளராக பிரியங்காவை (47) கட்சித் தலைவர் ராகுல் காந்தி நியமித்துள்ளார். அவர் தனது பணியை பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து மேற்கொள்வார்.
கட்சியின் மூத்த தலைவரான ஜோதிராதித்ய சிந்தியாவை, உத்தரப் பிரதேச மாநில மேற்கு பகுதி பொதுச் செயலாளராக ராகுல் காந்தி நியமித்துள்ளார். இந்தப் பதவியை முன்பு மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத் வகித்தார். அவர் ஹரியாணா மாநில காங்கிரஸ் பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அசோக் கெலாட், ராஜஸ்தான் முதல்வராக பதவியேற்றுள்ளார். எனவே அந்த பதவியில் கட்சியின் மூத்த தலைவர் கே.சி. வேணுகோபாலை ராகுல் காந்தி நியமித்துள்ளார். தற்போது வகிக்கும் கர்நாடக மாநில பொதுச் செயலாளர் பதவியிலும் வேணுகோபால் நீடிப்பார் என்று அந்த அறிவிப்பில் காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டுள்ளது.
ராகுல் காந்தி மகிழ்ச்சி: காங்கிரஸ் கட்சியில் பிரியங்காவுக்கு பதவி கொடுக்கப்பட்டிருப்பதற்கு ராகுல் காந்தி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், அமேதியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதுகுறித்து அவர் கூறியதாவது:
மக்களவைத் தேர்தலில் எனக்கு எனது சகோதரி, உத்தரப் பிரதேசத்தில் உதவி செய்யப் போகிறார் என்பது மகிழச்சியாக உள்ளது. அவர் மிகவும் திறமைசாலி. ஜோதிராதித்ய சிந்தியாவும், பன்முகத்தன்மை கொண்ட தலைவர் ஆவார்.
உத்தரப் பிரதேசத்துக்கு வெறும் இருமாதகால பணிக்காக இருவரையும் அனுப்பவில்லை. காங்கிரஸின் உண்மையான சித்தாந்தத்தை ஏழை மக்களிடமும், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களிடமும் எடுத்துச் செல்லும் பணி அவர்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. தனது சித்தாந்தத்துக்காக காங்கிரஸ் போராடுகிறது. பிரியங்காவும், ஜோதிராதித்ய சிந்தியாவும், இளமையான மற்றும் வலிமையான தலைவர்கள் ஆவர். அவர்களின் உதவியுடன், உத்தரப் பிரதேச அரசியலை மாற்ற விரும்புகிறோம் எனத் தெரிவித்தார்.
ராபர்ட் வதேரா வாழ்த்து: பிரியங்காவுக்கு வாழ்த்து தெரிவித்து, அவரது கணவரும், தொழிலதிபருமான ராபர்ட் வதேரா முகநூலில் பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில் அவர், பிரியங்காவுக்கு வாழ்த்துகள்; வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் எனது ஆதரவு உண்டு. கட்சிக்கு சிறந்த பங்களிப்பை அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்பு: காங்கிரஸில் பிரியங்காவுக்கு பதவி அளிக்கப்பட்டிருப்பதை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கமல்நாத், அசோக் சவாண் உள்ளிட்ட பலரும் வரவேற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் பல்வேறு மாநில பிரிவுகளும், பிரியங்காவை வரவேற்பதாக தெரிவித்துள்ளன.
அரசியலுக்கு அதிகாரப்பூர்வமாக தற்போதுதான் பிரியங்கா வந்துள்ளார் என்றபோதிலும், தமது தாயார் சோனியா காந்தி, சகோதரர் ராகுல் காந்தி ஆகியோரை ஆதரித்து இதற்கு முன்பு பல தேர்தல்களில் அவர் பிரசாரம் செய்துள்ளார். அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் சார்பாக யாரை முதல்வராக்குவது என்பது தொடர்பான விவாதங்களிலும் பிரியங்கா கலந்து கொண்டார்.
காங்கிரஸ் நம்பிக்கை: மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜும், சமாஜவாதியும் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன. இக்கூட்டணியில் காங்கிரஸ் சேர்க்கப்படவில்லை. இதனால் காங்கிரஸ் நம்பிக்கை இழந்திருந்தது. இந்நிலையில், உத்தரப் பிரதேச காங்கிரஸில் பிரியங்காவுக்கு பதவி அளிக்கப்பட்டிருப்பது, அக்கட்சித் தொண்டர்களிடையே நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
ஒரேயொரு குடும்பம்தான் காங்கிரஸுக்கு கட்சி - மோடி
பிரியங்காவுக்கு காங்கிரஸில் பதவி அளிக்கப்பட்டிருப்பது, ஒரேயொரு குடும்பம்தான், காங்கிரஸுக்கு கட்சியாக உள்ளது என்பதை வெளிக்காட்டுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் பாராமதி, கட்சிரோலி உள்ளிட்ட நகரங்களைச் சேர்ந்த பாஜக தொண்டர்களுடன் மோடி காணொலி வாயிலாக புதன்கிழமை கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது: பல இடங்களில் குடும்பமே கட்சியாக உள்ளது; அவ்வாறில்லாமல், பாஜக ஒரு குடும்பமாக உள்ளது. பாஜகவில் தனிப்பட்ட ஒரு நபர் அல்லது குடும்பத்தினர் விருப்பப்படி முடிவுகள் எடுக்கப்படுவதில்லை. கட்சித் தொண்டர்களின் விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டே அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுகின்றன.
பாஜக, ஜனநாயகக் கொள்கைகளால் இயங்கி வருகிறது. கட்சியின் அனைத்து நிலைகளிலும் ஜனநாயகம் தழைத்தோங்குகிறது. ஆகவேதான், தங்களுக்கு நெருக்கமான கட்சியாக பாஜகவை மக்கள் உணர்கிறார்கள் என்றார் மோடி.