
பல கட்சிகளை குடும்ப உறுப்பிறுனர்களே நிர்வகித்து வரும் நிலையில், ஜனநாயகம் தழைத்தோங்கும் கட்சியாக பாஜக விளங்குகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி, அதிகாரப்பூர்வமாக அரசியலுக்குள் அடியெடுத்து வைத்துள்ள அடுத்த சில மணி நேரங்களில் இந்தக் கருத்தை பிரதமர் தெரிவித்தார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பாராமதி கட்சிரோலி, ஹிங்கோலி, நாந்தேட், நந்துர்பார் ஆகிய நகரங்களைச் சேர்ந்த பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக புதன்கிழமை கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:
பல இடங்களில் குடும்பமே கட்சியாக உள்ளது; அவ்வாறில்லாமல், பாஜக ஒரு குடும்பமாக உள்ளது. பாஜகவில் தனிப்பட்டஒரு நபரின் அல்லது குடும்பத்தினர் விருப்பப்படி முடிவுகள் எடுக்கப்படுவதில்லை. கட்சித் தொண்டர்களின் விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டே அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுகின்றன.
பாஜக, ஜனநாயகக் கொள்கைகளால் இயங்கி வருகிறது. கட்சியின் அனைத்து நிலைகளிலும் ஜனநாயகம் தழைத்தோங்குகிறது. ஆகவேதான், தங்களுக்கு நெருக்கமான கட்சியாக பாஜகவை மக்கள் உணர்கிறார்கள் என்றார் மோடி.