
கடந்த 2017-18 காலகட்டத்தில் தேசிய கட்சிகளுக்கு கிடைத்த நிதியில் 50 சதவீதம், பெயர் குறிப்பிடாத நபர்கள்/நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளதாக ஜனநாயக சீரமைப்புக்கான கூட்டமைப்பு (ஏடிஆர்) தகவல் வெளியிட்டுள்ளது.
தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்கும் அமைப்பான ஏடிஆர், 6 தேசிய கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ள வருமான வரிக் கணக்கு தாக்கல், நன்கொடை விவரங்களின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டது.
புதன்கிழமை வெளியிடப்பட்ட அந்த ஆய்வுத் தகவலின்படி, 2017-18 காலகட்டத்தில் பாஜக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மொத்த வருவாய் ரூ.1,293.05 கோடியாகும்.
அதில் ரூ.689.44 கோடி நிதி, பெயர் குறிப்பிடாத நபர்கள்/நிறுவனங்களிடமிருந்து கிடைத்துள்ளது. இது, அந்தக் கட்சிகளின் மொத்த வருவாயில் 53 சதவீதமாகும்.
இந்த ரூ.689.44 கோடியில், பாஜகவுக்கு மட்டும் ரூ.553.8 கோடி நிதி அவ்வாறு பெயர் குறிப்பிடாத ஆதாரத்திலிருந்து கிடைத்துள்ளது. அதாவது, 6 தேசிய கட்சிகளுக்குமாக கிடைத்துள்ள மொத்த நிதியில் இது 80 சதவீதமாகும். பெயர் குறிப்பிடாத ஆதாரத்திலிருந்து கிடைத்த ரூ.689.44 கோடியில், ரூ.354.22 கோடி தன்னார்வ அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. அவை ரூ.20,000-க்கும் குறைவான மதிப்பில் பெறப்பட்டுள்ளன.
மேலும், பெயர் குறிப்பிடாத நபர்கள்/நிறுவனங்களிடம் இருந்து கிடைத்துள்ள நிதியில் ரூ.215 கோடி, தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் பெறப்பட்டுள்ளன.
அந்த 6 தேசிய கட்சிகளுக்கும் கிடைத்துள்ள நிதியில் ரூ.467.13 கோடி அறியப்படும் நன்கொடையாளர்களால் வழங்கப்பட்டுள்ளன. அவர்களது நிதி பங்களிப்பு தொடர்பான விவரங்கள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தேசிய கட்சிகளுக்கான நன்கொடைகளில் ரூ.16.80 லட்சம் மட்டும் ரொக்கமாக வழங்கப்பட்டுள்ளன.
ரூ.136.48 கோடி, சொத்து மற்றும் பதிப்பக விற்பனை, உறுப்பினர் கட்டணம், வங்கி வட்டி, கட்சி வசூல் உள்ளிட்ட அறியப்படும் ஆதாரங்களிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளன.
தற்போதைய நிலையில், ரூ.20,000-க்கும் குறைவான மதிப்பில் நன்கொடை அளிப்பவர்கள், தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் நிதி வழங்குபவர்கள் ஆகியோரின் பெயரை அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டிய தேவையில்லை.