
கோப்புப் படம்
ராணுவ தளவாட உற்பத்தியில் முதலீடு செய்ய தொழில் நிறுவனங்களுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்தார்.
உலக முதலீட்டாளர் மாநாட்டில் வானூர்தி மற்றும் ராணுவ தளவாட உற்பத்திக்கான தனி கொள்கையை வெளியிட்டு அவர் பேசியது:-
பாதுகாப்புத் துறை உபகரணங்களை இந்தியா அதிகமாக இறக்குமதி செய்கிறது. இவற்றை இங்கேயே தயாரித்து ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பது பிரதமரின் ஆசை. பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய வேண்டும். இதற்காகவே ராணுவ தளவாட உற்பத்தி வழித் தடம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
வர்த்தகத்திலும், தொழிலிலும் தமிழகம் பல நூறாண்டுகளுக்கு முன்பாகவே சிறந்து விளங்கியுள்ளது. பூம்புகார் மிகச் சிறந்த துறைமுகமாகத் திகழ்ந்தது. சோழர் காலத்திலும் வர்த்தக அமைப்புகள் இருந்தன. இவற்ரை வரலாற்றுப் பதிவுகள், கல்வெட்டுகளில் காணமுடியும்.
உகந்த நாடு இந்தியா: வர்த்தகம், தொழிலில் முன்பிருந்த அதே பெருமையை மீண்டும் நாம் பெற வேண்டும். உலக அளவில் கடந்த 5 ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருந்ததாக சர்வதேச செலாவணி நிதியம் (ஐ.எம்.எப்.,) தெரிவித்துள்ளது. பணவீக்கம் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. தொழில் தொடங்க உகந்த நாடாக இந்தியா வளர்ந்துள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சி வீதம் 6.5 ஆக உள்ளது. இனி வரும் ஆண்டுகளில் உள்நாட்டு வளர்ச்சி வீதம் 7-ஐத் தாண்டும் என்று ஐ.எம்.எப்., கணித்துள்ளது.
ஜி.எஸ்.டி. யில் கடந்த 60 ஆண்டுகளில் செய்யப்படாத சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியது பிரதமர் மோடி தலைமையிலான அரசுதான். வர்த்தக வளர்ச்சிக்கு இந்த சீர்திருத்தங்கள் உதவும். கடந்த 4 ஆண்டுகளுக்குள் தொழில் வளர்ச்சியில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. அறிவுசார் சொத்துகள், மின்னாளுமை, பருவநிலை மாற்றங்கள் குறித்த விவகாரங்களில் நல்ல முன்னேற்றங்களை அடைந்துள்ளோம்.
சமநிலைப் பொருளாதாரம்: காற்றாலை, சூரிய சக்தி மின்சாரத்தை பயன்படுத்துவதில் நாம்தான் முன்னிலை பெற்றுள்ளோம். இதில் தமிழகத்தின் பங்களிப்பு அதிகம். தற்போது மின்மிகை மாநிலமாக தமிழகம் திகழ்வதற்கும் இது காரணம். நிலையான கொள்கைகளை மத்திய அரசு இயற்றுவதால் பல்வேறு வளர்ச்சிகள் பெறப்படுகின்றன. தமிழகத்தில் சமநிலையான பொருளாதாரம் நிலவுகிறது.
தமிழகத்துக்கு பாராட்டு: தமிழக மாணவர்கள் ஜப்பான், கொரியா போன்ற பிற நாட்டு மொழிகளையும் கற்க வேண்டும். தொழில், தகவல் தொடர்புத் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். பிற நாடுகளுடன் எளிதான தொடர்புக்கு இது உதவும். இந்தியா ஒரு உற்பத்தி, ஏற்றுமதி கேந்திரமாக வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடி முனைப்பாக உள்ளார். தொழில் வளர்ச்சிக்கு தமிழகம் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் மத்திய அரசு முழு ஒத்துழைப்பை வழங்கும்.