நாங்கள் ஆட்சிக்கு வந்தால், உலகின் எந்த அரசும் செய்யாத இந்த திட்டத்தை  செயல்படுத்துவோம்: ராகுல் வாக்குறுதி

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமான திட்டம் கொண்டுவரப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று (திங்கள்கிழமை) தெரிவித்தார்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், உலகின் எந்த அரசும் செய்யாத இந்த திட்டத்தை  செயல்படுத்துவோம்: ராகுல் வாக்குறுதி


காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமான திட்டம் கொண்டுவரப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று (திங்கள்கிழமை) தெரிவித்தார்.    

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்ததற்காக, அம்மாநில மக்களுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,

"வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை காங்கிரஸ் எடுத்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமான திட்டத்தை வழங்கவுள்ளது. இதன்படி, இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் குறைந்தபட்சமாக ஒரு வருமானம் இருக்கும். இதன்மூலம், இந்தியாவில் வறுமையும், பசியும் இருக்காது.   

நமக்கு இரண்டு இந்தியா வேண்டாம். ஒரே ஒரு இந்தியா போதும். அந்த இந்தியாவில், அனைத்து ஏழைகளுக்கும் காங்கிரஸ் கட்சி குறைந்தபட்ச வருமானத்தை அளிக்கும். உலகில் எந்தவொரு அரசும் இதுவரை இதை செய்யவில்லை. காங்கிரஸ் அதை செய்யவுள்ளது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க செயல். 

நரேந்திர மோடி மற்றும் பாஜகவுக்கு இரண்டு இந்தியாவை உருவாக்க வேண்டும். 

ஒன்று: தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி, அனில் அம்பானி, மெஹூல் சோக்ஸி, நீரவ் மோடி மற்றும் நரேந்திர மோடி. இதில், நீங்கள் என்ன கேட்டாலும் கிடைக்கும். ரஃபேல் ஒப்பந்தம் வேண்டுமா? அது கிடைக்கும். நிலம், நீர், மின்சாரம் வேண்டுமா, அதுவும் கிடைக்கும். 

மற்றொரு இந்தியா: ஏழைகள், விவசாயிகள், வலிமையற்றவர்கள் மற்றும் இளைஞர்களை கொண்டது. இந்த இந்தியாவில் உங்களுக்கு எதுவுமே கிடைக்காது. அதில் உங்களுக்கு வெறும் 'மன் கி பாத்' ( பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி), 24 மணி நேரமும் 'மன் கி பாத்' கிடைக்கும். 

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில், கூட்டு நிறுவன ஒப்பந்தப் படி அம்பானி நிறுவனத்துக்கு பதிலாக பொதுத்துறை நிறுவனம் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தை இணைத்திருந்தால், சத்தீஸ்கர் அல்லது ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான இளைஞர்ளுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும். 

ஆனால், மோடி அரசு அப்போதைய பிரான்ஸ் அதிபர் பிரான்காய்ஸ் ஹோலன்டேவிடம், ஒப்பந்தத்தை அம்பானியிடம் வழங்குங்கள், பிரான்ஸ் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கட்டும் என்று தெரிவித்தது.  

சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தோம். ஆனால், ஆட்சியமைத்த ஒரே நாளில் அதை அமல்படுத்திவிட்டோம்" என்றார். 

இந்த கூட்டத்தில் அவர் ஒரு சில விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி சான்றிதழை வழங்கினார். 

இதையடுத்து, டிவிட்டர் பக்கத்தில் பதிவிடுகையில், " நமது லட்சக்கணக்கான சகோதர, சகோதரிகள் வறுமையில் வாடும் போது, நம்மால் புதிய இந்தியாவை உருவாக்க முடியாது. 2019-இல் ஆட்சிக்கு வந்தால், வறுமை மற்றும் பசியை ஒழிக்க அனைத்து ஏழைகளுக்கும் குறைந்தபட்ச வருமானத்துக்கான உத்தரவாதத்தை காங்கிரஸ் அளிக்கும். இது தான் எங்களுடைய கனவும், வாக்குறுதியும்" என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com