உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு பணிச்சுமையா? இந்த வழக்குக்குத் தீர்ப்பு யார் சொல்வது??

உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதாக மத்திய சட்டத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு பணிச்சுமையா? இந்த வழக்குக்குத் தீர்ப்பு யார் சொல்வது??


உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதாக மத்திய சட்டத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சட்டத் துறை வெளியிட்டிருக்கும் புள்ளி விவரங்களைக் கேட்டால் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நினைத்து வழக்குப் போடுபவர்களே கவலை கொள்ள நேரிடும்.

அதாவது, உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஒவ்வொருவருக்கும் சுமார் நான்காயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதுவும் நீதிபதிகள் முன் இருக்கும் வழக்குகளின் சராசரிதான். 

இது தொடர்பாக நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு சட்டத் துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அதில், நீதிபதிகளின் காலிப் பணியிடங்களை நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

ஜனவரி 1ம் தேதி தெலங்கானா மாநிலத்துக்கு புதிய உயர் நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள உயர் நீதிமன்றங்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில், மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் 2018 வரையிலான காலகட்டத்தில் 2.91 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இதேப்போல 2018ம் ஆண்டு இறுதி வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் உள்ள 24 உயர் நீதிமன்றங்களில் 47.68 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

உயர் நீதிமன்றங்களில் 1,079 நீதிபதிகள் பணியாற்ற வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் தற்போது 695 நீதிபதிகள்தான் பணியாற்றுகிறார்கள். இதன் மூலம் 384 நீதிபதிகளின் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. நீதிபதிகளின் காலிப்பணியிடங்கள் காரணமாகவே, பணியாற்றும் நீதிபதிகளுக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது. ஒரு பக்கம் வழக்குகள் பல ஆண்டுகாலம் நிலுவையில் இருப்பது பிரச்னை என்றால், மறுபக்கம், ஒரு நீதிபதிக்கு 4 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் இருப்பது மகா பிரச்னையேதான்.

கீழமை நீதிமன்றங்களில் 22,644 நீதிபதிகள் பணியாற்றலாம் என்ற நிலையில் தற்போது 17,509 நீதிபதிகள்தான் பணியாற்றுகிறார்கள். சுமார் ஐந்து ஆயிரம் நீதிபதிகள் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

தீர்ப்பு சொல்ல வேண்டிய நீதிபதிகளுக்கே ஒரு பிரச்னை என்றால், அந்த பிரச்னைக்கு யார் தீர்ப்பு சொல்வது?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com