இணையவழி வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு கட்டுப்பாடு: மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்து ஸ்நாப்டீல், ஷாப்குளூஸ் கடிதம்

இணையவழி வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் பிப்ரவரி 1-ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வருவதற்கு வரவேற்பு தெரிவித்து மத்திய அரசுக்கு ஸ்நாப்டீல், ஷாப்குளூஸ்
இணையவழி வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு கட்டுப்பாடு: மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்து ஸ்நாப்டீல், ஷாப்குளூஸ் கடிதம்

இணையவழி வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் பிப்ரவரி 1-ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வருவதற்கு வரவேற்பு தெரிவித்து மத்திய அரசுக்கு ஸ்நாப்டீல், ஷாப்குளூஸ் ஆகிய நிறுவனங்கள் கடிதம் எழுதியுள்ளன.

அமேசான், ஃபிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது இந்த இரு நிறுவனங்களும் சிறிய இணையவழி வர்த்தக நிறுவனங்களாகும். 

அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்று செயல்படும் ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் போட்டியாளர்களை ஒழிக்கும் வகையிலான சலுகைகளை வாரி வழங்குவது போன்றவற்றைத் தடுக்கும் நோக்கில் அவற்றுக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு கடந்த மாதம் அதிகரித்தது.

அதன்படி, இந்த நிறுவனங்கள் தங்களிடம் உள்ள அனைத்து விற்பனையாளர்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் சேவை அளிக்க வேண்டும். தங்களிடம் மட்டுமே ஒரு நிறுவனத்தின் குறிப்பிட்ட பொருள் கிடைக்கும் என்ற நிலையை உருவாக்கி, அதிக விலையை நிர்ணயிக்கக் கூடாது. ஒரு விற்பனையாளர் தன்னிடம் உள்ள பொருள்களில் 25 சதவீதத்தை மட்டுமே ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் விற்க வேண்டும். தங்களிடம் மட்டுமே பொருள்களை விற்பனை செய்ய வேண்டும் என்று எந்த விற்பனையாளரையும் ஆன்லைன் நிறுவனங்கள் கட்டாயப்படுத்தக் கூடாது. தாங்கள் மட்டுமே ஒரு குறிப்பிட்ட பொருள் விற்பனை செய்கிறோம் என்பது போன்ற நிலையை ஏற்படுத்தக் கூடாது. "கேஷ் பேக்' என்ற பெயரில் தள்ளுபடி அளிக்கும்போது, வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப பாரபட்சம் காட்டக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 

இது தவிர அந்நிய நேரடி முதலீட்டு விதிகளின்படி, அந்நிய முதலீட்டில் செயல்படும் ஆன்லைன் நிறுவனங்கள் இந்திய நிறுவனங்கள் மூலம்தான் பொருள்களை விற்க வேண்டும். ஆனால், அமேசான், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் மறைமுகமாக தங்கள் நிதியை இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்து, அவற்றை தங்கள் வர்த்தகத்துக்கு பயன்படுத்துகின்றன. 

இதனை தடுக்கும் வகையிலும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. இவை அனைத்தும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.

இந்நிலையில் இணைய வழி வர்த்தகத் துறையில் உள்ள சிறிய நிறுவனமான ஸ்நாப்டீலின் தலைமைச் செயல் அதிகாரி குணால் பாஹல், மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு சில நாள்களுக்கு முன்பு ஒரு கடிதம் எழுதினார். அதில், "இணையவழி வர்த்தகத்தில் உள்ள நிறுவனங்களின் அந்நிய நேரடி முதலீட்டுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது மிகவும் வரவேற்கத்தக்கது. இந்த கட்டுப்பாடுகளை ஏற்கெனவே குறிப்பிட்ட பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும். அதில் எவ்வித அவகாசமும் அளிக்கப்படக் கூடாது' என்று கூறியுள்ளார்.

இதேபோல ஷாப்குளூஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சஞ்சய் சேத் எழுதியுள்ள கடிதத்தில், "இணையவழி வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டு நிறுவனங்களுக்கு கொண்டுவரப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் முறையாக அமல்படுத்தப்படுகின்றனவா? என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில், இது இத்துறையில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள மிகவும் முக்கியமான நடவடிக்கை' என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com