
பாஜக எம்.பி.க்கள் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. மக்களவையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாஜகவுக்கு அதிகஅளவில் எம்.பி.க்கள் இப்போது உள்ளனர். இந்த சூழ்நிலையில் இந்தக் கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திலும், தொகுதி வளர்ச்சிப் பணிகளிலும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பேசுவார்கள் என்று தெரிகிறது.
மேலும், பாஜக தலைமையிலான அரசு அமைந்த பிறகு இப்போது முதல் கூட்டத் தொடர் நடைபெறுகிறது. இதில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதுடன், பல்வேறு முக்கிய மசோதாக்களும் நிறைவேற்றப்படவுள்ளன. இது தொடர்பாக எம்.பி.க்கள் மத்தியில் மோடி பேசுவார் என்று தெரிகிறது. எனினும், இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ள விஷயங்கள் குறித்து பாஜக சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
பாஜக தேசிய அளவில் வலுவான கட்சியாக உருவெடுத்த பிறகு, எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற மூத்த தலைவர்களை இல்லாமல் பாஜக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுவது இதுவே முதல்முறை. இந்த முறை அவர்கள் இருவரும் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இந்தக் கூட்டம் கடந்த 25-ஆம் தேதி நடைபெற இருந்தது. ராஜஸ்தான் மாநில பாஜக தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான மதன் லால் சைனியின் மறைவை அடுத்து பாஜக எம்.பி.க்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.