
வன விலங்குகளை வேட்டையாடியதாக கடந்த 6 ஆண்டுகளில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
வன விலங்குகளைக் பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக அண்மையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
வன விலங்குகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு வாரியத்தின் தகவலின்படி கடந்த 2012 முதல் 2018-ஆம் ஆண்டு வரை வன விலங்குகளை வேட்டையாடிய குற்றத்துக்காக 9,253 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் தகவலின்படி, புலி மற்றும் சிறுத்தைகளை வேட்டையாடியதாக 141 வழக்குகள் பதிவாகியுள்ளன. வேட்டையாடப்பட்ட 84 புலி, சிறுத்தையின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அங்கிருந்து அதிகபட்சமாக 12 புலி, சிறுத்தைகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காகவே வன விலங்குகள் வேட்டையாடப்படுகின்றன. இந்த வேட்டையைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் இணைத்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
வனப் பகுதிகளில் கண்காணிப்பை அதிகரிப்பது, நவீன தொழில்நுட்பங்கள் மூலம் பாதுகாப்பை மேம்படுத்து போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.