திருமலையில் பேட்டரி வாகனங்களை பயன்படுத்த தேவஸ்தானம் ஆலோசனை 

திருமலையில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைக் கட்டுப்படுத்த பேட்டரியால் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்த தேவஸ்தானம் ஆலோசனை நடத்தி வருவதாக

திருமலையில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைக் கட்டுப்படுத்த பேட்டரியால் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்த தேவஸ்தானம் ஆலோசனை நடத்தி வருவதாக தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்தார்.
 திருமலையில் உள்ள வைகுண்டம் காத்திருப்பு அறைகள், லட்டு பூந்தி தயாரிக்கும் மடப்பள்ளி, தரிசன வரிசைகள் உள்ளிட்ட இடங்களை ஞாயிற்றுக்கிழமை காலை பார்வையிட்ட பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
 புண்ணிய ஷேத்திரமான திருமலையில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைக் கட்டுப்படுத்த எரிபொருள் மூலம் இயங்கும் வாகனங்களுக்குப் பதிலாக பேட்டரியால் இயங்கும் வாகனங்களை இயக்குவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. முதலில் திருமலையில் இயக்கப்படும் இலவசப் பேருந்துகளில் இந்த மாற்றம் கொண்டு வரப்படும். அதன்பின் படிப்படியாக அவை விரிவுபடுத்தப்படும். தேவஸ்தானம் வழங்கும் அன்னதானம், குடிநீர், மருத்துவ வசதிகள் அனைத்தும் திருப்திகரமாக உள்ளன.
 வார இறுதி நாள்களில் தரிசன நேரம் 20 மணிநேரம் வரை நீள்கிறது. இதைக் குறைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். ஒரு வாரத்திற்குள் அறங்காவலர் குழு அமைக்கப்பட உள்ளது. அக்குழுவில் விவாதித்து அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும் என்றார் அவர்.
 சேகர் ரெட்டி சந்திப்பு: தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள சுப்பா ரெட்டியை அறங்காவலர் குழு முன்னாள் உறுப்பினர் சேகர் ரெட்டி ஞாயிற்றுக்கிழமை காலை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று சேகர் ரெட்டி தெரிவித்தார்.
 சேகர் ரெட்டி அறங்காவலர் குழு உறுப்பினராக இருந்தபோது ஊழல் வழக்கில் சிறை சென்றதால் அவரை ஆந்திர அரசு அப்பதவியிலிருந்து நீக்கியது. தற்போது புதிய அறங்காவலர் குழு அமைய உள்ள நிலையில் அவர் சுப்பா ரெட்டியைச் சந்தித்தது பல்வேறு யூகங்களை எழுப்பியுள்ளது. இருவரும் தொழிலதிபர்கள் என்பதால் இச்சந்திப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com