சுடச்சுட

  

  காஷ்மீர் பிரச்னைகளுக்கு நேருவே காரணம்: அமித் ஷா குற்றச்சாட்டு

  By DIN  |   Published on : 02nd July 2019 05:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  amithsha

  ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிக்கும் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் பேசும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.


  ஜம்மு-காஷ்மீர் மாநில பிரச்னைகளுக்கு மறைந்த பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் முடிவே காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டினார்.
  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்வது தொடர்பான தீர்மானம், மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அப்போது நடைபெற்ற விவாதத்துக்கு அமித் ஷா பதிலளித்துப் பேசியதாவது:
  ஜம்மு-காஷ்மீர் மாநிலம், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இந்தியாவில் இருந்து ஜம்மு-காஷ்மீரை யாராலும் பிரிக்க முடியாது. காஷ்மீர் பாரம்பரியம், மனிதநேயம், அமைதியை பாதுகாப்பது தொடர்பான கொள்கையில் மத்தியில் ஆளும் மோடி அரசு உறுதியாக உள்ளது. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம், பிரிவினையை அரசு சகித்துக் கொள்ளாது. அமைதியை இந்தியா விரும்புகிறது. அதேநேரத்தில், இந்தியாவின் எல்லைகளுக்கு மதிப்புக் கொடுக்காதோருடன் அமைதியை ஏற்படுத்த இந்தியா விரும்பாது.
  குடியரசுத் தலைவர் ஆட்சியின்கீழ், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பள்ளிகளை மீண்டும் திறந்துள்ளோம். அங்குள்ள மக்களுக்கு சமையல் எரிவாயு இணைப்புகளையும், மின்சார வசதியையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.
  காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் இருந்து சூபி பாரம்பரியங்கள் மறையவும், காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேறவும் பிரிவினைவாத சக்திகள்தான் காரணம். சூபி பாரம்பரியம், காஷ்மீர் பண்டிட்டுகள், காஷ்மீர் பாரம்பரியத்தின் ஒரு பகுதி கிடையாதா?
  காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இந்தியாவில் பிரிவினையை ஏற்படுத்துவது குறித்து பேசுவோருக்கு அவர்களது மொழியிலேயே பதிலடி கொடுப்பது என்பதில் மத்திய அரசு தெளிவாக உள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜனநாயகம் என்பது 3 குடும்பங்களுடன் கட்டுப்படுத்தக் கூடாது.
  மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்படாததற்கு, அனைத்து வேட்பாளர்களுக்கும் போதிய பாதுகாப்பு வழங்க இயலாது என்பதுதான் காரணமாகும். மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆகியோருக்கு ஒரே நேரத்தில் பாதுகாப்பு வழங்க இயலாது என்று பாதுகாப்பு அமைப்புகள் தெரிவித்தன. சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவது தொடர்பான முடிவை தேர்தல் ஆணையம் எடுக்கும்பட்சத்தில், அதை செயல்படுத்துவதில் ஒரு நாள் கூட மத்திய அரசு தாமதம் செய்யாது.
  ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் முன்பு பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால்தான், மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் (பிடிபி) பாஜக கூட்டணி அமைத்தது. இருப்பினும், பிடிபி அரசின் ஆட்சியில் பிரிவினைவாதம் ஊக்குவிக்கப்படுகிறது என்பதை உணர்ந்ததும், அக்கட்சியுடனான உறவை துண்டித்துக் கொண்டது.
  மறைந்த பிரதமர் ஜவாஹர்லால் நேரு தொடர்பாக மக்களிடம் பொய்யான தகவலை தெரிவிக்க அரசு விரும்பவில்லை. ஆனால் கடந்த காலங்களில் செய்யப்பட்ட தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டியது அவசியமாகும். காஷ்மீர் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் நேருவின் முடிவே காரணம். காஷ்மீரில் மூன்றில் ஒரு பகுதி பாகிஸ்தான் வசம் இருந்தபோது சண்டை நிறுத்தம் மேற்கொள்வது தொடர்பாக நேரு வெளியிட்ட அறிவிப்புதான் மூல காரணம் என்றார் அமித் ஷா.
  முன்னதாக, தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் (காங்கிரஸ்) பேசியபோது, ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றார். அவர் மேலும் பேசியதாவது:
  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி, அந்த மாநிலத்தை தில்லியிலிருந்து மத்திய அரசு ஆட்சி செய்கிறது. தில்லியிலிருந்து ஜம்மு-காஷ்மீரை ஆட்சி செய்வதை நிறுத்த வேண்டும். தேர்தல்களை நடத்துவது ஒன்றுதான், மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் சிறந்த நடவடிக்கையாக இருக்கும் என்றார்.
  எல்லைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கான இடஒதுக்கீட்டை 3 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக இரண்டு மடங்கு அதிகரிக்கும் அரசின் முடிவு குறித்தும் குலாம் நபி ஆசாத் கேள்வியெழுப்பினார்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai