காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ராஜினாமாவுக்குப் பின்னால் பாஜக இல்லை: எடியூரப்பா

கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ராஜினாமா பின்னணியில் பாஜக இருப்பதாக அக்கட்சி குற்றம்சாட்டுவதை முற்றிலும் மறுத்துள்ளார் கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா.
காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ராஜினாமாவுக்குப் பின்னால் பாஜக இல்லை: எடியூரப்பா


பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ராஜினாமா பின்னணியில் பாஜக இருப்பதாக அக்கட்சி குற்றம்சாட்டுவதை முற்றிலும் மறுத்துள்ளார் கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா.

காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களின் ராஜினாமா என்பது ஆளுங்கட்சியின் மீதான அதிருப்தி காரணமாகவே நடந்திருப்பதாகவும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

2 காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ராஜினாமாவால் ஆளும் மஜத - காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கும் நிலையில், வாய் திறந்திருக்கும் எடியூரப்பா, ஜூலை 12ம் தேதி கர்நாடக சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத் தொடர் நடக்கும் போது அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது குறித்து இதுவரை யோசிக்கவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கர்நாடக அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்று எப்போதுமே நாங்கள் கூறியதில்லை. சில அதிருப்தி எம்எல்ஏக்கள் வெளியே வருவார்கள் என்று மட்டும்தான் கூறியிருந்தோம் என்றும் எடியூரப்பா கூறினார்.

முன்னதாக,
கர்நாடக அரசியலில் திடீர் திருப்பமாக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 2 பேர் ராஜிநாமா செய்துள்ளனர். மேலும் சில எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்யலாம் என்று கூறப்படுவதால், ஆளும்  மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பெல்லாரி மாவட்டத்துக்குள்பட்ட விஜயநகர் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த்சிங், தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்துள்ளார். அவர் பெங்களூரில் பேரவைத் தலைவர் ரமேஷ்குமாரையும், ஆளுநர் மாளிகையில் ஆளுநர் வஜுபாய் வாலாவையும் சந்தித்து ராஜிநாமா கடிதத்தை அளித்தார்.

ராஜிநாமா கடிதம் கிடைக்கவில்லை என்று திங்கள்கிழமை காலையில் தெரிவித்திருந்த ரமேஷ்குமார், பின்னர் நண்பகல் 2 மணிக்கு தனது அலுவலகம் மூலம் வெளியிட்டிருந்த விளக்கத்தில் கடிதம் கிடைத்ததாகக் கூறியிருந்தார். 

இதனிடையே, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்துள்ள கோகக் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் ஜார்கிஹோளி தனது ராஜிநாமா கடிதத்தை பேரவைத் தலைவர் ரமேஷ்குமாருக்கு தொலைநகல் வழியாக அனுப்பியுள்ளார். நேரில் அளிக்காததால், ரமேஷ் ஜார்கிஹோளியின் ராஜிநாமா கடிதம் ஏற்கப்படுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

அரசுக்கு நெருக்கடி:  2018-ஆம் ஆண்டில் நடைபெற்ற  சட்டப் பேரவைத் தேர்தலில் 105 எம்எல்ஏக்களுடன் பாஜக வெற்றி பெற்று,  தனிப்பெரும் கட்சியாக இருந்தது. இருப்பினும்,  ஆட்சி அமைக்கத் தேவையான 113 எம்எல்ஏக்கள் இல்லை. இதனிடையே, 38 எம்எல்ஏக்களைக் கொண்ட மஜதவும், 79 எம்எல்ஏக்களைக் கொண்ட காங்கிரஸும் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றன. 2 சுயேச்சைகளின் ஆதரவும் உண்டு.

கூட்டணி ஆட்சி தானாக கவிழும் என்று கூறிவரும் பாஜக, திரைமறைவில் காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களை இழுக்க முயற்சிப்பதாகக் கூறப்படுகின்றது. அண்மையில் 2 சுயேச்சை எம்எல்ஏக்களும் ஆளுங்கட்சிக்கு ஆதரவுத் தெரிவித்து, அமைச்சர்களாகப் பதவியேற்றுகொண்டனர்.

கூட்டணி அரசுக்கு 119 எம்எல்ஏக்கள் உள்ளனர். பாஜகவைவிட கூட்டணி அரசுக்கு 14 எம்எல்ஏக்கள் கூடுதலாக உள்ளனர். 2 பேர் ராஜிநாமாவால்,  கூட்டணிஅரசுக்கு 117 எம்எல்ஏக்கள் உள்ளனர். 

ஆட்சிக்குத் தேவையான அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் திகழ்வதால் கூட்டணி அரசுக்கு தற்போதைக்கு ஆபத்திருக்காது. மேலும் 13 எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்தால் மட்டுமே ஆட்சி கவிழும் நிலை உருவாகும்.

இருப்பினும், அடுத்த சில நாட்களில் காங்கிரஸில் இருந்து 7 எம்எல்ஏக்களும், மஜதவில் இருந்து 3 எம்எல்ஏக்களும் விலகுவார்கள் என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com