நோபல் விஞ்ஞானிகளுடன் இந்திய இளம் விஞ்ஞானிகள் சந்திப்பு

இந்திய இளம் விஞ்ஞானிகள் 44 பேர், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.


இந்திய இளம் விஞ்ஞானிகள் 44 பேர், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
நோபல் பரிசு பெற்றவர்களின் 69-ஆவது சந்திப்புக் கூட்டம் ஜெர்மனியின் லிண்டா நகரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதில் 89 நாடுகளைச் சேர்ந்த 580 இளம் விஞ்ஞானிகள் கலந்துகொண்டனர். இந்தியாவைச் சேர்ந்த 44 விஞ்ஞானிகளும் இதில் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டமானது, 7 நாள்கள் நடைபெற உள்ளது.
இதன் மூலம், இளம் விஞ்ஞானிகள் நோபல் பரிசு பெற்றவர்களுடன் நேரடியாக ஆலோசனை நடத்தி, அவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ள முடியும். இளம் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுதோறும் இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான கூட்டம் இயற்பியல் துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் இயற்பியல் துறையில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் பங்கேற்ற பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவி மேகா ஜெயின் கூறுகையில், நான் ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் பிரிவில் நோபல் பரிசு பெற்றவர்களுடன் ஆலோசனை செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
குஜராத்தைச் சேர்ந்த அதிதி தோஷ்னிவால் கூறுகையில், இந்தக் கூட்டத்தில் பங்கேற்க கடந்த 7 ஆண்டுகளாக முயற்சித்து வந்தேன். தற்போது இந்த வாய்ப்பு கிட்டியுள்ளது. கடந்த ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு பெற்ற டோனா ஸ்டிரிக்லேண்ட் உடன் ஆலோசனை நடத்த மிகவும் ஆர்வமாக உள்ளேன் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com