ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கத் திட்டம்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

வங்கிசாரா நிதி நிறுவனங்களைக் கண்காணிக்கும் விவகாரத்தில், இந்திய ரிசர்வ் வங்கிக்கு (ஆர்பிஐ) கூடுதல் அதிகாரம் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கத் திட்டம்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்


வங்கிசாரா நிதி நிறுவனங்களைக் கண்காணிக்கும் விவகாரத்தில், இந்திய ரிசர்வ் வங்கிக்கு (ஆர்பிஐ) கூடுதல் அதிகாரம் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
வங்கிசாரா நிதி நிறுவனங்கள் குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை எழுத்து மூலம் பதிலளித்ததாவது:
ஜூன் 23-ஆம் தேதி நிலவரப்படி, 9,463 வங்கிசாரா நிதி நிறுவனங்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்நிறுவனங்களின் பணப் புழக்கம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி கண்காணித்து வருகிறது. அந்நிறுவனங்களின் செயல்பாட்டையும், மற்ற துறைகளுக்கும் அந்நிறுவனங்களுக்கும் இடையேயான தொடர்பு குறித்தும், பணப் புழக்கம் குறித்தும் ஆர்பிஐ தொடர்ந்து கண்காணிக்கும்.
நிதி நிறுவனங்களை வலிமைப்படுத்தவும், பொருளாதார அமைப்பை ஸ்திரப்படுத்தவும் ஆர்பிஐ தகுந்த வழிகாட்டும் பணிகளையும், கண்காணிப்புப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. நிதி நிறுவனங்களைக் கண்காணிக்கும் விவகாரத்தில், கடந்த 1934-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுடன், கூடுதல் அதிகாரங்களை வழங்க வேண்டுமென ஆர்பிஐ தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
ஆர்பிஐக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது என்று நிர்மலா தெரிவித்தார்.
தங்கத்தின் இறக்குமதி வரி: தங்கத்தின் மீதான இறக்குமதி வரியைக் குறைக்கும்படி வணிகர்கள் எழுப்பிய கோரிக்கை மத்திய அரசை வந்தடைந்ததா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்து மூலம் நிர்மலா பதிலளித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது: 
வணிகர்கள் எழுப்பிய கோரிக்கை மத்திய அரசுக்குக் கிடைத்தது. இதற்கு முன்பாக, மத்திய வர்த்தக அமைச்சகமும் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட வேண்டுமென கோரிக்கை எழுப்பியிருந்தது. ஆண்டு நிதிநிலை அறிக்கையின் ஒருபகுதியாக அக்கோரிக்கைகள் ஆராயப்பட்டன. கடந்த 2018-19 நிதியாண்டில் 982 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. இது கடந்த 2017-18 நிதியாண்டில் 955 டன்னாகவும், 2016-17இல் 778 டன்னாகவும், 2015-16இல் 968 டன்னாகவும் இருந்தது என்று அவர் குறிப்பிட்டிருந்தார். தங்கத்தின் மீது தற்போது 10 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com