வங்கிகள் கடனை வசூலிக்க குண்டர்களை நியமிக்க முடியாது: மக்களவையில் அமைச்சர் தகவல்

வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து கடனை வசூலிக்க குண்டர்களை நியமிக்க அதிகாரம் கிடையாது என்று மக்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்தார்.


வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து கடனை வசூலிக்க குண்டர்களை நியமிக்க அதிகாரம் கிடையாது என்று மக்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்தார்.
வங்கிகள் குறிப்பாக தனியார் வங்கிகள் கடன்களை வசூலிப்பதில் அடாவடியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுகிறது. இந்தப் பிரச்னை தொடர்பாக மக்களவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது விளக்கம் கேட்கப்பட்டது. இதற்கு அனுராக் தாக்குர் பதிலளித்து கூறியதாவது:
கடனை வசூலிப்பதற்காக குண்டர்களை நியமிக்க வங்கிகள் உள்பட யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது. கடன் வசூல் தொடர்பாக கடன் வசூல் முகவர்களை நியமிக்க ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) விதிகள் உள்ளன. அவ்வாறு நியமிக்கப்படுபவர் போலீஸார் மூலம் பின்புலம் ஆராயப்பட்ட நபராக இருக்க வேண்டும்.  கடன் வசூல் தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்.
வங்கிகள் கடனை வசூலிப்பதற்கென்று ஆர்பிஐ விதிமுறைகளை வகுத்துள்ளது. அதனை வங்கிகள் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். கடன் வசூலிக்கிறோம் என்ற பெயரில் கடுமையான மனஉளச்சலுக்கு உள்ளாக்குவது, தேவையற்ற நேரத்தில் தொந்தரவு செய்வது, குண்டர்களை அனுப்பி அடாவடியான நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்றவை கடன் வசூல் விதிகளுக்கு முரணானவை.
அடாவடியான கடன் வசூல் நடைமுறை தொடர்பாக தொடர்ந்து புகார்கள் வரும் பட்சத்தில் அந்த குறிப்பிட்ட பகுதிகளில் வங்கிகள் கடன் வசூல் முகவர்களை நியமிக்கக் கூடாது என்று உத்தரவிடவும் ஆர்பிஐ-க்கு அதிகாரம் உள்ளது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com