வேலையின்மை அதிகரிப்பா? அமைச்சர் மறுப்பு

நமது நாட்டில் வேலையின்மை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துவிட்டதாக கூறுவது தவறானது. மக்களை திசை திருப்பும் நோக்கில் இதுபோன்ற தவறான தகவல்கள் வெளியிடப்படுகின்றன


நமது நாட்டில் வேலையின்மை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துவிட்டதாக கூறுவது தவறானது. மக்களை திசை திருப்பும் நோக்கில் இதுபோன்ற தவறான தகவல்கள் வெளியிடப்படுகின்றன என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் மக்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் நமது நாட்டில் வேலையின்மை விகிதம் 6.1 சதவீதமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும் என்றும் தகவல் வெளியானது.
இதனை மையமாக வைத்து காங்கிரஸ் எம்.பி. அடூர் பிரகாஷ் மக்களவையில் கேள்வி எழுப்பினார். அப்போது, நாட்டில் வேலையின்மை விகிதம் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது. வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த அரசு ஏதேனும் சிறப்புத் திட்டங்களை வைத்துள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் கங்வார் கூறியதாவது:
நாட்டில் வேலையின்மை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துவிட்டதாக வெளியான தகவல் தவறானது. இது தொடர்பான விவாதத்துக்கு நான் தயாராகவே இருக்கிறேன். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் தொடர்ந்து பயனில் இருப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 2018-19 ஆம் ஆண்டில் பிரதமர் வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் 5 லட்சத்து 86 ஆயிரத்து 728 பேருக்கு வேலை கிடைத்துள்ளது. பிரதமர் முத்ரா திட்டத்தின்கீழ் தொழில், வர்த்தகத்துக்காக ரூ.18.26 லட்சம் கோடி அளவுக்கு கடன் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 16-ஆம் தேதி வரை மத்திய அரசு அளிக்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின்கீழ் 1.21 கோடி பேர் பயனடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கடந்த 3 ஆண்டுகளில் புதிதாக பணியில் சேர்ந்தவர்கள். வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்றார்.
முன்னதாக, வேலையின்மை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துவிட்டதாக கூறப்படுவது தவறான தகவல் என்று அமைச்சர் கூறியபோது, எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து அதற்கு பெரும் எதிர்ப்புக் குரல் எழுந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com