
நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் எனக் கருதப்படும் 160 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்திருப்பதாவது: பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தொடர்பான உளவுத்துறை தகவல்கள் அவ்வப்போது மாநில அரசுகளுக்கும், உளவுப்பிரிவு அமைப்புகளுக்கும் பகிர்ந்து உஷார்படுத்தப்படுகிறது. தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) மற்றும் மாநில காவல்துறை மூலம் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் என்ற வகையில் இதுவரை 160 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளம் உள்பட பல்வேறு மாநிலங்களிலும் தனிப்பட்ட நபர்கள் ஐஎஸ் அமைப்பில் இணைந்த சம்பவங்கள் குறித்த பல்வேறு தகவல்களும் மத்திய அரசின் உளவுப்பிரிவு மற்றும் புலனாய்வு அமைப்புகளின் கவனத்துக்கு வந்துள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.