
பயங்கரவாத குழுக்கள், பிரிவினைவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டிய வழக்கு தொடர்பாக, காஷ்மீரிலிருந்து வெளியாகும் பிரபல ஆங்கில நாளிதழின் ஆசிரியரிடம் செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) விசாரணை நடத்தினர்.
மேலும், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையது அலி ஷா கிலானியின் பேரன் அனீஸ் உல் இஸ்லாமிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ள என்ஐஏ அதிகாரிகள், ஜூலை 9-இல் விசாரணைக்கு ஆஜராக அவருக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.
இதுதொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் கூறியதாவது:
காஷ்மீரில் பயங்கரவாத குழுக்கள், பிரிவினைவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டிய வழக்கில், இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் அவ்வப்போது சோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த வழக்கு தொடர்பாக, காஷ்மீரிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழின் பொது மேலாளரிடம் அண்மையில் விசாரணை நடைபெற்றது. தற்போது அந்த நாளிதழின் ஆசிரியரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தவுள்ளோம்.
கடந்த 2016-இல் பயங்கரவாதி பர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, காஷ்மீரில் போராட்டங்கள் நடைபெற்றபோது, அந்த நாளிதழில் வெளியான சில கட்டுரைகள் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. மேலும், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொண்டது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது.
இதேபோல், பிரிவினைவாத தலைவர் சையது அலி கிலானியின் பேரன் அனீஸ் உல் இஸ்லாமிடம் விசாரணை நடத்தவுள்ளோம். அதற்காக ஜூலை 9-ஆம் தேதி என்ஐஏ அதிகாரிகள் முன் ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது என்றனர்.