
கடந்த 5 ஆண்டுகளில் ஹஜ் புனிதப் பயணத்துக்கான இடஒதுக்கீடு 63,980 அதிகரித்துள்ளது என்று மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.
இதுதொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் வியாழக்கிழமை அளித்த பதில்:
கடந்த 2003ஆம் ஆண்டில், இந்தியாவில் ஹஜ் புனிதப் பயணத்துக்கான இடஒதுக்கீடு 1,36,020 ஆக இருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் ஹஜ் இடஒதுக்கீடு 63,980 அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு 2 லட்சம் பேர் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். மானியம் இல்லாமல் 2 லட்சம் பேர் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வது இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்திய ஹஜ் குழு 1,40,000 பேரையும், ஹஜ் குழு ஏற்பாட்டாளர்கள் 60,000 பேரையும் அழைத்துச் செல்வார்கள். ஹஜ் குழு ஏற்பாட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட 60,000 பேரில் 10,000 பேருக்கு (பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்) இந்திய ஹஜ் குழு நிர்ணயித்த கட்டணம் வசூலிக்கப்படும் என்றார் நக்வி.