கவிழும் நிலையில் கர்நாடக அரசு: ஆட்சியைக் காப்பாற்றும் முயற்சியில் காங்கிரஸ் - மஜத தலைவர்கள்

எம்எல்ஏக்கள் ராஜிநாமாவைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலத்தில் நடைபெற்றுவரும் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) கூட்டணி அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது
கவிழும் நிலையில் கர்நாடக அரசு: ஆட்சியைக் காப்பாற்றும் முயற்சியில் காங்கிரஸ் - மஜத தலைவர்கள்

எம்எல்ஏக்கள் ராஜிநாமாவைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலத்தில் நடைபெற்றுவரும் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) கூட்டணி அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்சியைக் காப்பாற்ற இரு கட்சிகளின் தலைவர்களும் கடைசிக் கட்ட முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
 14 மாதங்களாக கர்நாடகத்தில் ஆட்சி நடத்தி வரும் முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத- காங்கிரஸ் கூட்டணி அரசு நெருக்கடியில் சிக்கியுள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங் தனது பதவியை கடந்த 1-ஆம் தேதி ராஜிநாமா செய்து, சட்டப் பேரவைத் தலைவரிடம் கடிதம் அளித்திருந்தார்.
 இந்த நிலையில், காங்கிரஸின் 10 எம்எல்ஏக்கள், மஜதவின் 3 எம்எல்ஏக்கள் என 13 பேர் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்வதாக சனிக்கிழமை அறிவித்தனர். அவர்கள் பேரவைத் தலைவர் ரமேஷ்குமாரை நேரில் சந்திக்க முடியாததைத் தொடர்ந்து, அவரது அலுவலகத்தில் ராஜிநாமா கடிதங்களை அளித்தனர். பின்னர், இதன் நகல்களை ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்தும் அளித்தனர். இதைத் தொடர்ந்து, பெங்களூரு விமான நிலையத்துக்கு வருகை தந்த எம்எல்ஏக்கள், அங்கிருந்து மும்பைக்குச் சென்று அங்குள்ள நட்சத்திர விடுதியில் முகாமிட்டுள்ளனர்.
 மேலும் சில எம்எல்ஏக்கள் ராஜிநாமா?
 சட்டப்பேரவையில் 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் 119 எம்எல்ஏக்கள் ஆதரவைப் பெற்றிருந்த மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசின் பலம் தற்போது 105 ஆக குறைந்துவிட்டது. அதேநேரத்தில் பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
 இந்த நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ ரோஷன் பெய்க் உள்ளிட்ட சில எம்எல்ஏக்களும் விரைவில் ராஜிநாமா செய்யலாம் என்று தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, கூட்டணி அரசைக் காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸ், மஜத கட்சிகளின் தலைவர்கள் கடைசிக் கட்ட முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
 காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் முகாம்: காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் பெங்களூருக்கு சனிக்கிழமை வருகை தந்தார்.
 குமாரகுருபா விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ள கே.சி.வேணுகோபால், முன்னாள் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர், கட்சியின் மாநிலச் செயல் தலைவர் ஈஸ்வர் கண்ட்ரே, அமைச்சர்கள் டி.கே.சிவக்குமார், கே.ஜே.ஜார்ஜ் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் ஆலோசனையில் ஈடுபட்டார்.
 இதனிடையே, பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள இல்லத்தில் முன்னாள் பிரதமரும் மஜத தேசியத் தலைவருமான எச்.டி.தேவெகெளடாவை காங்கிரஸ் மூத்தத் தலைவரும், நீர்வளத் துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து அரசியல் நிலவரங்கள் குறித்து விவாதித்தனர்.
 இதனிடையே, பதவியை ராஜிநாமா செய்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அதனை உடனடியாக திரும்பப் பெறக் கோரி, கர்நாடக மாநில காங்கிரஸ் அலுவலகம் முன் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 பெங்களூரு திரும்பினார் முதல்வர் குமாரசாமி: கடந்த ஒரு வாரமாக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த முதல்வர் குமாரசாமி ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு பெங்களூரு திரும்பினார். பின்னர் நட்சத்திர விடுதி ஒன்றில், எச்.டி.தேவெகெளடா முன்னிலையில் நடைபெற்ற மஜத எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார். கூட்டத்தில் ஆட்சியை தக்கவைத்து கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயப்பட்டன.
 இதையடுத்து, இதே விடுதியில் முதல்வர் குமாரசாமியை காங்கிரஸ் தலைவர்கள் கே.சி.வேணுகோபால், சித்தராமையா, ஜி.பரமேஸ்வர், டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
 சோனியாவிடம் தேவெ கௌடா புகார்
 வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் முதல்வராவேன் என்று சித்தராமையா கூறி வந்திருந்தார். ராஜிநாமா செய்துள்ள எம்எல்ஏக்கள் எஸ்.டி.சோமசேகர், முனிரத்னா, பைரதிபசவராஜ் உள்ளிட்டோர் சித்தராமையாவின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது. இதனால், சித்தராமையாவை முதல்வராக்க திரைமறைவு நாடகம் நடத்தப்படுகிறதா என்ற சந்தேகம் மஜத தலைவர்களிடையே எழுந்துள்ளது. இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் சோனியா காந்தியிடம் தேவெகெளடா ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்துள்ளார்.
 சித்தராமையா விளக்கம்
 சித்தராமையா அளித்துள்ள விளக்கத்தில், அதிருப்தி எம்எல்ஏக்கள் சிலரிடம் தொலைபேசி வழியாக பேசியிருக்கிறேன். என்ன பேசினேன் என்பதை கூறமுடியாது. "எனக்கு அல்ல, காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசமாக இருங்கள்' என்று அதிருப்தி எம்எல்ஏக்களை கேட்டுகொண்டிருக்கிறேன். எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்துள்ளதற்கு நான் காரணம் என்று கூறப்படுவதில் உண்மையில்லை. நான் முதல்வராவதற்காக ராஜிநாமா நாடகம் நடத்தப்படுவதாக கூறுகிறார்கள். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, மஜத எம்எல்ஏக்களும் ராஜிநாமா செய்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
 தலைவர்களின் கருத்தறிந்து முடிவு
 தும்கூரு, ஜூலை 7: தும்கூரு சித்தகங்கா மடத்தில் சிவகுமார சுவாமிகளின் சமாதியில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்திய பின்னர், எடியூரப்பா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதங்கள் மீது பேரவைத் தலைவர் எடுக்கும் நடவடிக்கைக்குப் பின், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பாஜக முடிவு செய்யும்.
 ராஜிநாமா கடிதங்கள் ஏற்கப்பட்டால், அதன் பிறகு பாஜக தேசிய, மாநிலத் தலைவர்களின் கருத்தறிந்து இறுதி முடிவெடுப்போம்.
 கூட்டணி அரசு கவிழுமா என்பதை என்னால் கூற முடியாது. ஜூலை 12-ஆம் தேதி முதல் சட்டப்பேரவையின் கூட்டத் தொடர் நடக்கவிருக்கிறது.
 கூட்டணி அரசானது தனது பெரும்பான்மையை இழந்துள்ளது. இந்த விவகாரத்தில் பேரவைத் தலைவரும், முதல்வரும் முடிவெடுக்க வேண்டும். மேலும் பல எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்யப் போவதாகவும் தெரியவந்துள்ளது என்றார் எடியூரப்பா.
 பின்னணியில் அமித் ஷா: காங்கிரஸ் குற்றச்சாட்டு
 கர்நாடகத்தில் காங்கிரஸ்- மஜத கூட்டணி அரசை கவிழ்க்கும் முயற்சியின் பின்னணியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்ளார் என்று காங்கிரஸ் மூத்தத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
 பெங்களூரில் அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
 பதவியை ராஜிநாமா செய்த ஒரு சில காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் பாஜகவினர் உதவியுடன் தனி விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டு, மும்பையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விரைவில் தில்லிக்கு அழைத்து செல்லப்பட்டு, பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான அமித் ஷாவை சந்திக்க உள்ளனர். கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளனர்.
 இதன் பின்னணியில் அமித்ஷா உள்ளார். பதவியை ராஜிநாமா செய்துள்ள எம்எல்ஏக்களை சமரசம் செய்யும் முயற்சி நடைபெற்று வருகிறது என்றார் மல்லிகார்ஜுன கார்கே.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com