காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல்

காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கும் கப்பல் என்று மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், பாஜகவின் மூத்த தலைவருமான சிவராஜ் சிங் சௌஹான் விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல்

காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கும் கப்பல் என்று மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், பாஜகவின் மூத்த தலைவருமான சிவராஜ் சிங் சௌஹான் விமர்சித்துள்ளார்.
 கர்நாடக மாநிலத்தில் மேலும் 13 எம்எல்ஏக்கள் சனிக்கிழமை ராஜிநாமா செய்ததை அடுத்து, அந்த மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் - மாஜத கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது குறித்து சிவராஜ் சிங் செளஹான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்வில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கும் கப்பல். இதனால், அக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூடப் பதவி விலகியுள்ளார். கட்சியின் கேப்டனே மூழ்கும் கப்பலில் இருந்து தப்பிக்க நினைக்கும் போது, அக்கட்சியின் எம்எல்ஏக்கள் தொடர்ந்து மூழ்கும் கப்பலில் இருக்க விரும்ப மாட்டார்கள்.
 காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி பதவி விலகியுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக மோதிலால் வோரா, அசோக் கெலாட் ஆகியோர் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டு வருகிறது. மோதிலால் வோராவுக்கு கிட்டத்தட்ட நூறு வயதாகிவிட்டது. கடந்த மக்களவைத் தேர்தலில் தனது மகனைக் கூட அசோக் கெலாட்டால் வெற்றிபெற வைக்க முடியவில்லை. இதுபோன்ற சூழலில் காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கும் கப்பல் என்பதைப் புரிந்து கொண்டு அக்கட்சி எம்எல்ஏக்கள் அக்கட்சியில் இருந்து விலக நினைப்பது சாதாரணமானது.
 தற்போது மூன்றில் இரண்டு பங்கு காஷ்மீர் பகுதி, பாகிஸ்தான் வசம் இருப்பதற்கு முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு செய்த தவறே காரணமாகும். அவரது மகளான இந்திரா காந்தி, ஜனநாயகத்தை நசுக்கி அழிக்கும் செயல்களில் ஈடுபட்டார். இந்திராவின் மகன் ராஜீவ் காந்தி, ஷாபானு ஜீவானாம்ச வழக்கில் முஸ்லிம் பெண்களின் நலனுக்கு விரோதமாக செயல்பட்டார். மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் பெரும் ஊழல்களில் ஈடுபட்டனர். அவர்கள் செய்த தவறுகளுக்கான பலனை காங்கிரஸ் கட்சி இப்போது அனுபவித்துக் கொண்டு வருகிறது.
 தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் மிக விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து பிரிவு மக்களிடமும் மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை பாஜக தொண்டர்கள் கொண்டு செல்ல வேண்டும். தில்லியில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளையும் இலக்கு வைத்து தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com