சபாநாயகர் முடிவுக்காக புனேவில் காத்திருக்கும் 14 கர்நாடக எம்எல்ஏக்கள்!

தங்களது ராஜினாமா கடிதத்தின் மீது கர்நாடக பேரவைத் தலைவர் என்ன முடிவெடுக்கிறார் என்பதை அறிந்து கொள்வதற்காக கர்நாடக மாநிலத்தின் ஆளும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த 14 எம்எல்ஏக்கள் புனேவில் காத்திருக்கிறார்
சபாநாயகர் முடிவுக்காக புனேவில் காத்திருக்கும் 14 கர்நாடக எம்எல்ஏக்கள்!


மும்பை: தங்களது ராஜினாமா கடிதத்தின் மீது கர்நாடக பேரவைத் தலைவர் என்ன முடிவெடுக்கிறார் என்பதை அறிந்து கொள்வதற்காக கர்நாடக மாநிலத்தின் ஆளும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த 14 எம்எல்ஏக்கள் புனேவில் காத்திருக்கிறார்கள்.

அவைத் தலைவரின் முடிவை அடுத்து கோவா செல்வதா அல்லது பெங்களூரு திரும்புவதா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.

மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த 14 எம்எல்ஏக்களும் நேற்று மும்பை சொகுசு விடுதியில் இருந்து கிளம்பி கோவா செல்ல திட்டமிட்டனர். ஆனால், புனேவில் இருந்து 90 கி.மீ. தொலைவில் அவர்கள் தங்கியிருப்பதாகவும், தங்களது ராஜினாமாக் கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டால் உடனடியாகக் கிளம்பி பெங்களூரு செல்லலாம் என்று புனேவிலேயே காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

கர்நாடகாவில் 10 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், 2 மஜத கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் 3 சுயேச்சை எம்எல்ஏக்களும் தங்களது ராஜினாமா கடிதத்தை பேரவைத் தலைவரிடம் கொடுத்ததால் கர்நாடகாவில் ஆளும் கூட்டணிக் கட்சிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் காங்கிரஸ்,  மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) கூட்டணியைச் சேர்ந்த 14 எம்எல்ஏக்களின் ராஜிநாமாவால் நெருக்கடியில் சிக்கியுள்ள மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசைக் காப்பாற்ற முதல்வர் குமாரசாமி தலைமையிலான அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர், அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக ராஜிநாமா செய்தனர்.

பெங்களூரு சதாசிவ நகரில் உள்ள துணை முதல்வர் ஜி.பரமேஸ்வரின் இல்லத்தில் காங்கிரஸ் அமைச்சர்கள் திங்கள்கிழமை சந்தித்தனர். முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால், காங்கிரஸ் மாநிலத் தலைவர் தினேஷ்குண்டுராவ், அமைச்சர்கள் டி.கே.சிவகுமார், கே.ஜே.ஜார்ஜ், கிருஷ்ண பைரே கெளடா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

அமைச்சர்கள் ஆர்.வி. தேஷ்பாண்டே, சிவானந்த பாட்டீல் உள்ளிட்ட 4 அமைச்சர்கள் கலந்துகொள்ளவில்லை. எனினும், கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு கட்டுப்படுவதாக சித்தராமையாவிடம் 4 பேரும் ஒப்புதல் அளித்திருந்தனர்.

துணை முதல்வர், அமைச்சர்கள் ராஜிநாமா: இதன்படி, துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர், கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் 20 அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்ய முடிவுசெய்தனர்.  இதற்கான கடிதத்தை தங்கள் கைப்பட எழுதி காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் சித்தராமையாவிடம் அளித்தனர். கூட்டத்தில் கலந்துகொள்ளாத அமைச்சர்களும் இந்த முடிவுக்குக் கட்டுப்படுவதாகத் தெரிவித்தனர்.

மஜத அமைச்சர்களும் ராஜிநாமா: இதனிடையே, கூட்டத்துக்கு முதல்வர் குமாரசாமியும் வருகை தந்து, அரசியல் நிலவரங்கள் குறித்து காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். 

அப்போது, காங்கிரஸ் அமைச்சர்களைப் போல, மஜத அமைச்சர்களும் ஒட்டுமொத்தமாக ராஜிநாமா செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதுகுறித்து பின்னர் தனது சுட்டுரைப்பக்கத்தில் முதல்வர் குமாரசாமி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துள்ளதுபோல, மஜதவை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் பதவியை ராஜிநாமா செய்துள்ளனர். அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.

2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவு வாபஸ்: கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்துவந்த சுயேச்சை எம்எல்ஏக்கள் எச்.நாகேஷ், ஆர்.சங்கர் ஆகிய இருவரும் கடந்த ஜூன் 14-இல் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

இந்நிலையில்,இருவரும் கூட்டணி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை திரும்பப் பெற்றதோடு, அமைச்சர் பதவியையும் ராஜிநாமா செய்துள்ளனர்.  ஆனால், இருவரும் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்யவில்லை. ராஜிநாமாவுக்குப் பின்னர்,  இருவரும் தனித்தனியே விமானம் மூலம் மும்பை புறப்பட்டு, அங்கு தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்களுடன் இணைந்தனர். 

மஜதவுக்கு 37 எம்எல்ஏக்கள் உள்ளனர். மஜதவுக்கு பகுஜன்சமாஜ் கட்சி எம்எல்ஏ என்.மகேஷ் ஆதரவு அளித்து வந்துள்ளார். மஜதவின் 3 எம்எல்ஏக்கள் பதவியை ராஜிநாமா செய்துள்ள நிலையில், மேலும் சிலரை இழுக்க பாஜக முயற்சிக்கலாம் என்று கூறப்படுவதால், அவர்களை பாதுகாத்துக்கொள்ள அக்கட்சி முடிவுசெய்துள்ளது. இதன்காரணமாக, பெங்களூரில் தாஜ் வெஸ்ட்என்ட் நட்சத்திர விடுதியில் இருந்து பேருந்து மூலம் தேவனஹள்ளியில் உள்ள நட்சத்திர விடுதிக்கு மஜத எம்எல்ஏக்கள் திங்கள்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com