கர்நாடகத்தில் மேலும் 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜிநாமா: கூட்டணி அரசுக்குப் பெரும் பின்னடைவு

கர்நாடகத்தில் மஜதகாங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த 14 எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்துள்ள நிலையில், புதன்கிழமை மேலும் 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்தனர்.
கர்நாடகத்தில் மேலும் 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜிநாமா: கூட்டணி அரசுக்குப் பெரும் பின்னடைவு


கர்நாடகத்தில் மஜதகாங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த 14 எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்துள்ள நிலையில், புதன்கிழமை மேலும் 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்தனர். இதனால், மஜதகாங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பெரும் சிக்கல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், 2 சுயேச்சைகள் உள்பட 119 எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற்றிருந்த கூட்டணி அரசு, பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது. கூட்டணி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றதாலும், காங்கிரஸ் மஜதவைச் சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்திருப்பதாலும்,  கூட்டணி அரசின் பலம் 101ஆகக் குறைந்துள்ளது. இது மஜதகாங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
பெரும்பான்மை பலத்தை இழந்துள்ள மஜதகாங்கிரஸ் கூட்டணி உடனடியாக பதவி விலகக் கோரி பாஜக போராட்டம் நடத்திவரும் நிலையில், கூட்டணி அரசைக் கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டி காங்கிரஸ், மஜத கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. 
இதனிடையே, வீட்டு வசதித் துறை அமைச்சரும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான எம்.டி.பி.நாகராஜ், மற்றொரு காங்கிரஸ் எம்எல்ஏ கே.சுதாகர் ஆகிய இருவரும் பெங்களூருவில் புதன்கிழமை பேரவைத் தலைவர் ரமேஷ்குமாரைச் சந்தித்து ராஜிநாமா கடிதங்களை அளித்தனர். எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதங்களை பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் அங்கீகரித்தால், மஜதகாங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ வாய்ப்புள்ளது. 
இதுகுறித்து எம்.டி.பி.நாகராஜ் கூறியதாவது: கர்நாடகத்தில் நிலவும் அரசியல் சூழலால் மனம் வெதும்பியுள்ளேன்.  பொது வாழ்க்கையில் இருந்து ஓய்வுபெற விரும்புகிறேன்.  எனக்கு அமைச்சர் பதவி அல்லது வேறு எந்த பதவியும் வேண்டாம் என்றார். 
அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் இருந்த கே.சுதாகருக்கு, அண்மையில் கர்நாடக மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆளுநர் தலையிட பாஜக வலியுறுத்தல்:  காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ.க்கள் அளித்துள்ள ராஜிநாமா கடிதங்களை பேரவைத் தலைவர் அங்கீகரிக்காமல் இழுத்தடிப்பதாகவும், இந்த விவகாரத்தில் ஆளுநர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்தியுள்ளது.
பெரும்பான்மை பலத்தை இழந்துள்ள முதல்வர் குமாரசாமி தனது பதவியை ராஜிநாமா செய்யக் கோரி, பெங்களூரு சட்டப் பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே பாஜக எம்எல்ஏக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். 
பாஜக மாநிலத் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா தலைமையிலான பாஜகவினர் புதன்கிழமை ஆளுநர் வஜுபாய் வாலாவைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளைச் செயல்படுத்தும் வகையில், எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதங்களை அங்கீகரிக்க பேரவைத் தலைவருக்கு அறிவுறுத்த வேண்டும்' என்று ஆளுநருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
குமாரசாமி பதவி விலக வலியுறுத்தல்: ஆளுநரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் எடியூரப்பா கூறியது:  முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது.  அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். 
இனி மேலும் தாமதம் செய்யாமல் எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதங்களை பேரவைத் தலைவர் ஏற்கவேண்டும். 
எங்கள் மனுவை ஆராய்ந்த பிறகு தகுந்த நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார். எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதங்களை பேரவைத் தலைவர் ஏற்றுக் கொண்டால்,  ஜூலை 12ஆம் தேதி பேரவைக் கூட்டம் தொடங்காது. மேலும் பல எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்வார்கள். முதல்வர் குமாரசாமி உண்மைநிலையை உணர்ந்து, பதவி விலக வேண்டும் என்றார்.
உச்சநீதிமன்றத்தில் மனு: இதனிடையே, காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்வதாக கர்நாடகப் பேரவைத் தலைவரிடம் நாங்கள் கடிதம் அளித்துவிட்டோம். ஆனால், அவர் வேண்டுமென்றே அதனை ஏற்காமல் காலதாமதம் செய்கிறார் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை பரிசீலித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, மனுவை விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்தது. அதே நேரத்தில் இந்த மனுவை அவசர வழக்காக கருத வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.
முன்னதாக, மும்பையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள கர்நாடகத்தைச்  சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்களைச் சந்திக்க சென்ற கர்நாடக மாநில அமைச்சர் டி.கே. சிவகுமாரை மும்பை போலீஸார் தடுப்புக் காவலில் வைத்தனர். அவருடன் சென்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மிலிந்த் தேவ்ரா, நசீம் கான் ஆகியோரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com