நதிநீர்ப் பிரச்னைகளுக்கு ஒரே தீர்ப்பாயம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மாநிலங்களுக்கு இடையே நிலவும் நதிநீர்ப் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் தேசிய அளவில் ஒரே நதிநீர் தீர்ப்பாயம் அமைக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. 
நதிநீர்ப் பிரச்னைகளுக்கு ஒரே தீர்ப்பாயம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்


மாநிலங்களுக்கு இடையே நிலவும் நதிநீர்ப் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் தேசிய அளவில் ஒரே நதிநீர் தீர்ப்பாயம் அமைக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. 
இதற்காக மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் விவகார சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான சட்டத் திருத்த மசோதாவை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், நதிநீர் விவகாரச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது, போக்ஸோ சட்டத் திருத்தம், 13 தொழிலாளர் நலச் சட்டங்களை ஒரே பிரிவில் கொண்டு வருவது, முறைப்படுத்தப்படாத டெபாசிட் திட்டங்களுக்கு தடை விதிப்பது ஆகிய சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஒரே தீர்ப்பாயம்: நதிநீர்ப் பிரச்னைகளுக்கு தீர்வுகாண ஒரே தீர்ப்பாயம் அமைக்கும் வகையில், மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ப் பிரச்னைகள் சட்டம்  1956 திருத்தி அமைக்கப்படுகிறது. இதன் மூலம் தேசிய அளவில் ஒரே நதிநீர்த் தீர்ப்பாயம் இருக்கும். ஆனால், இதில் பல்வேறு அமர்வுகள் இருக்கும். மாநிலங்களுக்கு இடையே எழும் நதி நீர்ப்பிரச்னைகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தீர்த்து வைக்கப்படும் என்பது இதில் சிறப்பு அம்சமாகும். நதிநீர்ப் பகிர்வு தொடர்பான பிரச்னைகள் பல ஆண்டுகளுக்கு தொடராமல், விரைந்து தீர்வு காண வழி வகை செய்யப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கு இடையே நதிநீர்ப் பகிர்வில் பிரச்னை ஏற்படும்போது அதனை இரு மாநிலங்களும் பேசித் தீர்த்துக் கொள்ள முதலில் முயற்சி மேற்கொள்ளப்படும். அதில் தீர்வு கிடைக்காது என்ற நிலையில் மத்திய அரசு தீர்ப்பாயத்தை அமைத்து உத்தரவிடுவது இதுவரை இருந்த நடைமுறையாக இருந்தது.
முறைப்படுத்தப்படாத டெபாசிட்களுக்கு தடை: முறைப்படுத்தப்படாத டெபாசிட் திட்டங்களைத் தடை செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. முன்னதாக, இது தொடர்பாக அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இப்போது, அதற்கு மாற்றாக மசோதா நிறைவேற்றப்படவுள்ளது. அதிக லாபம் தருவதாகக் கூறி மக்களிடம் பண மோசடி செய்பவர்களுக்கு சிறைத் தண்டனை அளிக்க முடியும். அவர்களிடம் இருந்து பணத்தை மீட்டு மக்களிடம் மீண்டும் வழங்கவும் சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறுகையில், நிதி நிறுவன முறைகேடுகளால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்த புதிய சட்டத்தின் மூலம் முறைப்படுத்தப்படாத டெபாசிட் திட்டங்கள் தடை செய்யப்படும். இதன் மூலம் ஏமாற்று நிதி நிறுவனங்கள் மக்களின் பணத்தை மோசடி செய்வது தடுக்கப்படும். மக்கள் கடினப்பட்டு உழைத்து சேர்க்கும் பணத்தை மோசடியாளர்கள் கொண்டு செல்வதை மத்திய அரசு அனுமதிக்காது' என்றார்.
தொழிலாளர் நலச் சட்டம்: இப்போது நடைமுறையில் உள்ள 13 தொழிலாளர் நலச் சட்டங்களை ஒரே பிரிவில் கொண்டுவரும் சட்ட மசோதாவுக்கும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. குறைந்தபட்சம் 10 தொழிலாளர்கள் உள்ள தொழில் நிறுவனங்கள், வர்த்தகம், வியாபார நிறுவனங்கள், ஐ.டி. நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள் என அனைத்துக்கும் இச்சட்டம் பொருந்தும்.
இதற்காக தொழிலாளர்களுக்கு பணியிடத்தில் பாதுகாப்பு, உடல் நலன், சிறப்பான பணிச்சூழல், சட்ட மசோதா உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, திருநங்கைகளை சமூக பொருளாதார நிலையில் மேம்படுத்துவது, அவர்களைக் கல்வி ரீதியில் முன்னேற்றுவது தொடர்பான மசோதாவுக்கும்,  ரயில்வே போலீஸ் படைப் பிரிவில் குரூப் ஏ' அந்தஸ்து வழங்கவும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

போக்ஸோ சட்டத்தில் திருத்தம்
போக்ஸோ சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க முடியும்.
நாட்டில் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்ததை அடுத்து, அத்தகைய பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்காக கொண்டு வரப்பட்டது போக்ஸோ சட்டமாகும்.


போக்ஸோ சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத் திருத்தம் மூலம் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கலாம். மேலும் சிறார்களை பாலியல் விடியோக்களில் பயன்படுத்துபவர்களுக்கு அதிகபட்ச அபராதமும், சிறைத் தண்டனை விதிக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com