சுடச்சுட

    

    ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு: அப்ரூவராக மாறினார் இந்திராணி முகர்ஜி

    By DIN  |   Published on : 12th July 2019 04:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    indrani

    கோப்புப் படம்


    ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் தொழிலதிபர் இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாறியுள்ளார்.
    கடந்த 2007-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம், ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெற்றது. இந்த நிதியைப் பெறுவதற்காக, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அந்த நிறுவனத்துக்கு ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
    இது தொடர்பாக, சிபிஐ கடந்த 2017-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. அதைத் தொடர்ந்து, கருப்புப் பண மோசடி சட்டத்தின் கீழ் இந்திராணி முகர்ஜி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.
    இந்திராணி முகர்ஜி தனது மகள் ஷீனா போரா கொலை வழக்கில் கைதாகி, மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதே வழக்கில், அவரது கணவர் பீட்டர் முகர்ஜியும் கைதாகி அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    இதனிடையே, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அப்ரூவராகி சாட்சியம் அளிக்க விரும்புவதாக இந்திராணி முகர்ஜி கடந்த 4-ஆம் தேதி கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, அவருக்கு மன்னிப்பு வழங்கியது. ஒருவேளை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கட்டுப்படவில்லை என்றாலும், தவறான ஆதாரங்களை அளித்தாலும் குற்றச்செயல் புரிந்ததாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவரிடம் நீதிமன்றம் கூறியது.
    இந்நிலையில், சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி அருண் பரத்வாஜ் முன்னிலையில் இந்திராணி முகர்ஜி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, இந்த வழக்கில் நீதிமன்றம் எனக்கு மன்னிப்பு வழங்கியிருப்பதையும், எனக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதையும் நான் அறிவேன். இந்த வழக்கு தொடர்பான அனைத்து உண்மைகளையும் வாக்குமூலமாகத் தெரிவிப்பேன் என்று நீதிபதியிடம் இந்திராணி முகர்ஜி கூறினார்.
    இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு, தில்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai