சுடச்சுட

    

    பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தின்போது உறக்கத்தில் இருந்தார் நரசிம்மராவ்: சல்மான் குர்ஷித் புத்தகத்தில் தகவல்

    By DIN  |   Published on : 12th July 2019 05:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    salman


    கடந்த 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் உறக்கத்தில் இருந்ததால் சில முடிவுகளை உடனடியாக செயல்படுத்த முடியாமல் போனது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தனது புத்தகத்தில் கூறியுள்ளார். 
    அந்த காலகட்டத்தில் வெளியுறவுத் துறை இணையமைச்சராக இருந்த சல்மான் குர்ஷித், பிரதமர் நரசிம்ம ராவின் அமைச்சரவையில் இருந்த இளம் அமைச்சராவார். 
    இந்நிலையில், அவர் எழுதி வெளிவர இருக்கும், விசிபிள் முஸ்லிம், இன்விசிபிள் சிட்டிசன்; அண்டர்ஸ்டேன்டிங் இஸ்லாம் இன் இன்டியன் டெமாக்ரசி என்ற புத்தகத்தில் சல்மான் குர்ஷித் கூறியுள்ளதாவது: 
    1992 டிசம்பர் 6-ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, அப்போது உள்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சராக (பொறுப்பு) இருந்த ராஜேஷ் பைலட்டை அவசரமாக சந்தித்தேன். அயோத்தியில் பாபர் மசூதி பகுதியில் கூடியுள்ள கூட்டம் அந்த மசூதியை தொடர்ந்து இடித்துக் கொண்டிருந்தது. 
    அதைத் தடுக்க உடனடியாக ஏதாவது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ராஜேஷ் பைலட்டை கேட்டுக்கொண்டேன். அதையடுத்து, சம்பவம் நிகழும் ஃபைசாபாத் நகருக்கு தான் செல்வதாகத் தெரிவித்த ராஜேஷ் பைலட், இளம் அமைச்சர்கள் எவரேனும் பிரதமர் நரசிம்ம ராவை சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக கலந்தாலோசிக்க வேண்டும் என்று கூறினார். 
    இதையடுத்து அப்போதைய ரயில்வே துறை அமைச்சராக இருந்த ஜாஃபர் ஷெரீஃபை சந்தித்து, பிரதமர் நரசிம்ம ராவை அழைத்துப் பேச முடிவு செய்தோம். அதன்படி பிரதமர் நரசிம்ம ராவை ஜாபர் ஷெரீஃப் தொடர்பு கொண்டார். அப்போது ஜாபர் ஷெரீஃபிடம், முதன்மைச் செயலர் ஏ.என். வர்மா அல்லது உள்துறைச் செயலருடன் தொடர்பில் இருக்குமாறு நரசிம்ம ராவ் கூறினார். அவர்கள் இருவருமே உத்தரப் பிரதேசத்துக்கு உடனடியாகப் புறப்படும் நிலையில் இருந்தனர். 
    முதன்மைச் செயலர் ஏ.என். வர்மாவுக்கு சில சந்தேகங்களும், உடனடியாக உத்தரப் பிரதேச பயணம் மேற்கொள்ள முடியுமா என்ற ஐயமும் இருந்தது. எனவே, ராஜேஷ் பைலட்டை மீண்டும் சந்தித்து எங்களது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கலந்தாலோசித்தோம். அமைச்சர் ஜாஃபர் ஷெரீஃபின் வீட்டில் நடைபெற்ற அந்த கலந்தாலோசனைக் கூட்டத்தின் மூலம் சில தெளிவான முடிவுகளை மேற்கொண்டோம். 
    அதுதொடர்பாக பிரதமர் நரசிம்ம ராவிடம் தெரிவிக்க ராஜேஷ் பைலட் அவரைக் காணச் சென்றபோது நரசிம்ம ராவ் உறக்கத்திலிருந்தார். பிரதமரிடம் எங்கள் யோசனையை தெரிவிக்க இயலவில்லை என்பதால், பாபர் மசூதி பகுதியில் கூடியிருந்த கூட்டத்தை கலைக்க ராஜேஷ் பைலட் உள்ளிட்ட நாங்கள் மேற்கொண்ட முடிவுகளை செயல்படுத்த முடியாமல் போனது. 
    டிசம்பர் 7-ஆம் தேதி அங்கிருந்த ராமர் சிலைக்கு மேற்கூரை அமைக்க அந்தக் கூட்டத்தினர் முயன்றபோது, அங்கு வந்த துணை ராணுவப் படையினர் அவர்களை கலைத்தனர். பாபர் மசூதி இடிப்பு சம்பவமானது, சட்டம்-ஒழுங்கு, அரசு அமைப்புகளின் திறமை, அரசியல் சாசனம் அளிக்கும் உறுதி ஆகியவற்றின் மீது கேள்விக் குறியை ஏற்படுத்தியது என்று அந்தப் புத்தகத்தில் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai