அயோத்தி விவகாரம்: மத்தியஸ்தம் தொடர்பான அறிக்கையை கோரியது உச்சநீதிமன்றம்

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடம் தொடர்பான விவகாரத்துக்கு மத்தியஸ்தம் மூலம் தீர்வு காண்பதற்கான நடவடிக்கை குறித்த அறிக்கையை உச்சநீதிமன்றம் கோரியுள்ளது.
அயோத்தி விவகாரம்: மத்தியஸ்தம் தொடர்பான அறிக்கையை கோரியது உச்சநீதிமன்றம்


உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடம் தொடர்பான விவகாரத்துக்கு மத்தியஸ்தம் மூலம் தீர்வு காண்பதற்கான நடவடிக்கை குறித்த அறிக்கையை உச்சநீதிமன்றம் கோரியுள்ளது.
அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கில் உத்தரப் பிரதேச மாநிலம் அலாகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. அதில் சர்ச்சைக்குரிய இடத்தை சன்னி வஃக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய அமைப்புகள் சரிக்கு சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் முன்பு விசாரணை நடத்தியபோது, அயோத்தி அருகே உள்ள பைசாபாதில் வைத்து மத்தியஸ்த பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும், இதற்கான இடவசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் உத்தரப் பிரதேச மாநில அரசு செய்து தர வேண்டும் என்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நிர்மோஹி அகாரா, உத்தரப் பிரதேச அரசு ஆகிய பிரதிவாதிகள் தவிர்த்து, ஹிந்து அமைப்புகள் சார்பில் மத்தியஸ்தத்துக்கு தாங்கள் தயாராக இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. அதேநேரத்தில், முஸ்லிம் அமைப்புகள், மத்தியஸ்தத்தை தாங்கள் ஆதரிப்பதாக தெரிவித்தன.
இதனிடையே, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி எஃப்.எம்.ஐ. கலிஃபுல்லா தலைமையில் 3 பேர் கொண்ட மத்தியஸ்த குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. இந்தக் குழுவில், வாழும் கலை அமைப்பின் நிறுவனரும், ஆன்மிக குருவுமான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். அந்தக் குழுவுக்கு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி வரை அவகாசம் அளித்து, அதற்குள் மத்தியஸ்த நடவடிக்கைகளை முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டிருந்தது.
இந்நிலையில், அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கில் மனுதாரர் ஒருவரின் சட்டவாரிசான கோபால் சிங் விசாரத் என்பவர் உச்சநீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்துள்ளார். அதில், மத்தியஸ்தத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆதலால் மத்தியஸ்தத்துக்கு முடிவு கட்டிவிட்டு, நீதித்துறையே அயோத்தி விவகாரத்துக்கு தீர்வு காண வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ. போப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ. நஸீர் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
இன்றைய நாள்  வரையிலும் மத்தியஸ்தம் தொடர்பான நிலவரத்தை அறிக்கையாக வரும் 18 -ஆம் தேதிக்குள் கலிஃபுல்லா தாக்கல் செய்ய வேண்டும். கலிஃபுல்லா தமது அறிக்கையில் மத்தியஸ்தத்தை முடித்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்திருக்கும்பட்சத்தில், அதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும். மேலும், மேல்முறையீட்டு மனுக்கள் மீது ஜூலை 25-ஆம் தேதி முதல் உச்சநீதிமன்றம் விசாரணையைத் தொடங்கும். தேவைப்பட்டால் அந்த விசாரணையை நாள்தோறும் உச்சநீதிமன்றம் நடத்தும் என்றனர்.
இதையடுத்து மனு மீதான அடுத்தகட்ட விசாரணையை 18-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
பரபரப்பான  வாதம்: முன்னதாக, உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற  வாதத்தின்போது, கோபால் சிங் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கே. பராசரன், ராம் லல்லா விராஜ்மான் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ரஞ்சித் குமார் ஆகியோர் அயோத்தி விவகாரத்துக்கு தற்போதைய நிலையில் மத்தியஸ்தம் மூலம் தீர்வு காண முடியாது, உச்சநீதிமன்றமே தீர்வு காண வேண்டும் என்றனர். முஸ்லிம் அமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவன், மத்தியஸ்தம் வேண்டாம் என்ற கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
இருப்பினும் மேற்கண்ட வாதங்களை நீதிபதிகள் ஏற்கவில்லை. மத்தியஸ்த குழுவை உச்சநீதிமன்றம்தான் அமைத்தது, ஆதலால் அக்குழுவின் அறிக்கை கிடைத்தபிறகு அடுத்தகட்ட முடிவை உச்சநீதிமன்றம் எடுக்கும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com