கர்நாடகத்தில் தொடருகிறது அரசியல் குழப்பம்: பரபரப்பான சூழ்நிலையில் இன்று சட்டப்பேரவை கூடுகிறது

கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலும், அங்கு அரசியல் குழப்பத்துக்கு தீர்வு
கர்நாடகம், கோவாவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தைக் கண்டித்து தில்லி நாடாளுமன்ற வளாகத்தில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள்.
கர்நாடகம், கோவாவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தைக் கண்டித்து தில்லி நாடாளுமன்ற வளாகத்தில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள்.


கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலும், அங்கு அரசியல் குழப்பத்துக்கு தீர்வு கிடைக்கவில்லை. அதிருப்தி எம்எல்ஏக்களில் 10 பேர் இரண்டாவது முறையாக தங்கள் ராஜிநாமா கடிதத்தை பேரவைத் தலைவரிடம் வியாழக்கிழமை நேரில் அளித்தனர். எனினும், அதனை உடனடியாக ஏற்றுக்கொள்ள பேரவைத் தலைவர் மறுத்துவிட்டார். இதனால் கர்நாடகத்தில் அரசியல் சிக்கல் தொடர்ந்து வருகிறது.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஏற்கெனவே திட்டமிட்டப்படி பெங்களூரில் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) கர்நாடக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் நண்பகல் 12 மணிக்கு தொடங்கவிருக்கிறது. சட்டப்பேரவை கூடியதும் முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் தொடர பாஜக ஆட்சேபம் தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபடும் என்று தெரிகிறது. 
கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) - காங்கிரஸ் கூட்டணி அரசில் அமைச்சர் பதவி கிடைக்காததால், காங்கிரஸ், மஜத கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் கடந்த ஓராண்டு காலமாகவே தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தனர்.  இந்த நிலையில், கடந்த ஜூலை 1-ஆம் தேதி காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங், தனது பதவியை ராஜிநாமா செய்வதாக பேரவைத் தலைவர் ரமேஷ்குமாரிடம் கடிதம் அளித்திருந்தார். 
இதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 6-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரமேஷ் ஜார்கிஹோளி, ராமலிங்க ரெட்டி, எஸ்.டி.சோமசேகர், பைரதி பசவராஜ், பி.சி.பாட்டீல், சிவராம் ஹெப்பார், பிரதாப் கெளடா பாட்டீல்,  மகேஷ் குமட்டஹள்ளி, முனிரத்னா, மஜதவைச் சேர்ந்த எச்.விஸ்வநாத், கே.சி.நாராயணகெளடா, கோபாலையா ஆகிய 12 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்து,  அதற்கான கடிதங்களை பேரவைத் தலைவர் அலுவலகத்தில் அளித்திருந்தனர். 
ஜூலை 9-ஆம் தேதி காங்கிரஸ் எம்எல்ஏ ரோஷன் பெய்க், ஜூலை 10-ஆம் தேதி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எம்.டி.பி.நாகராஜ், கே.சுதாகர் ஆகியோர் தங்களது பதவியை ராஜிநாமா செய்து,  அதற்கான கடிதங்களை பேரவைத் தலைவரிடம் கொடுத்திருந்தனர்.
நீதிமன்றத்தில் வழக்கு:  இந்த நிலையில்,  தங்களது ராஜிநாமா கடிதங்களை ஏற்காமல் கால தாமதம் செய்வதால், அதன் மீது தகுந்த நடவடிக்கையை எடுக்க பேரவைத் தலைவருக்கு உத்தரவிடக் கோரி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பிரதாப் கெளடா பாட்டீல், பைரதி பசவராஜ், பி.சி.பாட்டீல், ரமேஷ் ஜார்கிஹோளி, சிவராம் ஹெப்பார், எஸ்.டி.சோமசேகர், மகேஷ் குமட்டஹள்ளி, மஜதவைச் சேர்ந்த கே.கோபாலையா, எச்.விஸ்வநாத், கே.சி.நாராயண கெளடா ஆகிய 10 பேரும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். 
உச்சநீதிமன்றம் உத்தரவு: இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், மாலை 6 மணிக்கு பேரவைத் தலைவரை நேரில் சந்தித்து ராஜிநாமா கடிதங்களைக் கொடுக்குமாறும், அவற்றின் மீது பேரவைத் தலைவர் எடுத்த நடவடிக்கையை வெள்ளிக்கிழமை (ஜூலை 12) தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. எம்எல்ஏக்களுக்கு தேவையான பாதுகாப்பு அளிக்கும்படியும் உச்சநீதிமன்றம் உத்தரவில் கூறியிருந்தது.
மும்பையில் இருந்து வந்து மீண்டும் ராஜிநாமா கடிதம்: அதன்படி, மும்பையில் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேரும் வியாழக்கிழமை தனி விமானம் மூலம் பெங்களூருக்கு வந்து சேர்ந்தனர். விமான நிலையத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்பில் சிற்றுந்து மூலம் சட்டப் பேரவைக்கு அவர்கள் வந்து சேர்ந்தனர்.  அங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, விதான செளதாவில் மாலை 6.15 மணிக்கு பேரவைத் தலைவர் ரமேஷ் குமாரை நேரில் சந்தித்த எம்எல்ஏக்கள் 10 பேரும் தங்கள் ராஜிநாமா கடிதங்களை மீண்டும் அளித்தனர். ராஜிநாமா கடிதங்களை உடனடியாக ஏற்க வேண்டுமென்று எம்எல்ஏக்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்க மறுத்த பேரவைத் தலைவர் ரமேஷ்குமார், எம்எல்ஏக்களிடம் தனியாக மற்றொரு முறை விசாரணை நடத்திய பிறகே அதுகுறித்து முடிவெடுக்க முடியும் என்று கூறிவிட்டார். இதைத் தொடர்ந்து, எம்எல்ஏக்கள் 10 பேரும் தனி விமானத்தில் மீண்டும் மும்பைக்குச் சென்றனர்.
சட்டப்பேரவைத் தலைவர் மனு: முன்னதாக, எம்எல்ஏக்களின் மனு மீது உச்சநீதிமன்றம் உத்தரவு பிறபித்த சில மணி நேரத்திலேயே சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவரும், மூத்த வழக்குரைஞருமான அபிஷேக் மனு சிங்வி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதம் மீது ஒரே நாளில் நடவடிக்கையை அறிவிக்க வேண்டும் என்ற உத்தரவை மாற்ற வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இதனைப் பரிசீலித்த நீதிபதிகள், அதிருப்தி எம்எல்ஏக்கள் மனு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வரும்போது, இந்த மனுவும் விசாரிக்கப்படும் என்று கூறிவிட்டனர்.

பேரவைத் தலைவர் விளக்கம்
காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதங்களை ஏற்பதில் கால தாமதம் செய்யவில்லை என்று பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் தெரிவித்தார்.


இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியது:   ராஜிநாமா கடிதங்கள் உண்மைத்தன்மை வாய்ந்ததா, தாமாக முன்வந்து தரப்பட்டதா என்பதை சட்டப்பேரவை விதி 202, அரசியலமைப்புச் சட்டவிதி 190-இன்படி உறுதி செய்துகொள்ளவேண்டியது என் கடமையாகும்.  
1967 முதல் 1971-ஆம் ஆண்டு வரையில் நூற்றுக்கணக்கான எம்எல்ஏக்கள் கட்சித் தாவியபடி இருந்தனர்.  அமைச்சர் பதவி தரவில்லை என்பதாலேயே 165 எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்திருந்தனர்.  இதை கருத்தில் கொண்டு 1971-இல் ஒய்.பி.சவாண் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, கட்சித் தாவல் தடைச் சட்டத்தை கொண்டுவர பரிந்துரைத்திருந்தது. 13 ஆண்டுகள் கிடப்பில் இருந்த கட்சித் தாவல் தடைச் சட்டத்தை 1984-இல் பிரதமரான ராஜீவ் காந்தி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினார்.  அதில் தேசிய நலன், ஜனநாயகத்தின் மாண்பு,  அரசியலமைப்புச்சட்டத்தின் நோக்கத்தை சரிவர பாதுகாப்பதே கட்சித் தாவல் தடைச்சட்டத்தின் நோக்கம் என்று கூறப்பட்டுள்ளது.
ராஜிநாமா கடிதங்களை உடனடியாக என்னால் ஏற்க முடியாது. முழுமையாக விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுப்பேன்.  அதற்கு ஒருவாரமோ, ஒருமாதமோ ஆகலாம். ஒருசில மாநிலங்களில் எம்எல்ஏக்களின்பதவி நீக்கம் மற்றும் ராஜிநாமா கடிதங்கள் மீது நடவடிக்கையே எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டிருக்கும் சம்பவங்களும் உண்டு.
சட்டப்பேரவை வெள்ளிக்கிழமை கூடுகிறது. அப்போது, அவை நடவடிக்கைகள் முழுமையாக விடியோ பதிவு செய்யப்பட்டு, உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்படும். பிற்பகலில் அதிருப்தி எம்எல்ஏக்களை சந்திக்க இருப்பதால், அப்போது அவையை வழி நடத்துமாறு சட்டப்பேரவை துணைத் தலைவரை கேட்டுக் கொள்வேன் என்றார் அவர்.

ராஜிநாமா இல்லை: முதல்வர் குமாரசாமி
நான் ஏன் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்? என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.


பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 
நான் ஏன் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்? தற்போதைய சூழ்நிலையில், ராஜிநாமா செய்வதற்கான அவசியம் என்ன?  2009-10-ஆம் ஆண்டு நடந்தது எங்களுக்குத் தெரியாதா? அப்போது, ஒரு சில அமைச்சர்கள் உள்பட 18 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்திருந்தனர்.  அந்த நிலையிலும், பாஜக அரசின் முதல்வராக இருந்த எடியூரப்பா தனது பதவியை ராஜிநாமா செய்யவில்லை என்றார்.
224 உறுப்பினர்கள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு 119 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது. இந்த நிலையில், கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றுள்ளதாலும்,  காங்கிரஸ், மஜதவைச் சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்திருப்பதாலும், கூட்டணி அரசின் பலம் 101-ஆகக் குறைந்துள்ளது.

சட்டப்பேரவைத் தலைவரை சந்திக்க வந்த அதிருப்தி எம்எல்ஏக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com